Viruvirupu
புதுக்கோட்டையில் அ.தி.மு.க.-வினரே திகைக்கும் அளவுக்கு
தே.மு.தி.க.-வையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் போட்டுப்
புரட்டியெடுக்கத் துவங்கியுள்ளார் நடிகர்-கம்-அரசியல்வாதி, சரத்குமார்.
பயம் கொள்ளாதீர்கள், அவரது சினிமாவில் வருவதுபோல கைகளால்
புரட்டியெடுக்கவில்லை. எல்லாமே வார்த்தைகளால்தான்.“தே.மு.தி.க. எம்.எல்ஏ.-க்கள் ஜெயித்ததே, பிச்சை எடுத்துத்தான் என்றிருக்கிறார் சரத். அவரது கூற்றுப்படி, தே.மு.தி.க.-வுக்கு எம்.எல்.ஏ. பிச்சை போட்டது, பிச்சை போட்டது, அ.தி.மு.க.!
(இந்த இரு தரப்பும் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிச்சை எடுக்காத குறையாகத்தான் மக்களிடம் கையேந்தி ஓட்டுக் கேட்டார்கள். அந்த வகையில் இரு தரப்புக்கும் பிச்சை போட்டது வாக்காளர்கள்தான் என்பதை யாரும் நினைப்பதில்லை)
சரத்குமாரின், ‘பிச்சை வாங்கி எம்.எல்.ஏ. ஆன கதை’ தே.மு.தி.க.-வினரைக் கொதிக்க வைத்திருக்கிறது. அதனால், தொகுதிக்குள் சரத்குமார் பிரச்சாரத்துக்கு போகும் இடங்களில் ஓரளவுக்கு பதட்டம் நிலவுகிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து சூரக்காடு, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் சுற்றி வந்தார் சரத்குமார். அப்போதுதான், தே.மு.தி.க.-வினரைப் போட்டுத் தாக்கினார் அவர். “தே.மு.தி.க.-வினருக்கு அடிப்படை நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது. அதை கட்சி தொண்டர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தான்.
ஆனால், அவருக்கே அடிப்படை நாகரீகமோ, அடிப்படை சட்டமோ தெரியாது என்பதுதான்தான் கொடுமை. பகுத்தறிவு, நேர்மை, நீதி, ஜனநாயகம் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு தே.மு.தி.க.-வினர் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் உருப்படும்” என்று தாக்குதலை ஆரம்பித்தார் சரத்குமார்.
“தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ளது என்றால், அதற்கு அ.தி.மு.க. போட்ட பிச்சைதான் காரணம் என்பதை தே.மு.தி.க.-வினரும், அதன் தலைவர் விஜயகாந்தும் உணர வேண்டும். இல்லையெனில் உணர வைக்கப்படுவார்கள்” என்றும் கூறினார் அவர்.
தே.மு.தி.க.-வினருக்கு அடிப்படை நாகரீகமே தெரியாது என்று கூறிய தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார், நாகரீகமான முறையில், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. ஆதரவில் ஜெயித்த பிச்சைக்காரர்கள் என்று கூறியதைக் கேட்க சுவாரசியமாக உள்ளது.
அடிப்படை நாகரீகத்துடன் பேசும் சரத்குமார், தென்காசித் தொகுதியில் அ.தி.மு.க. பிச்சை போடாமல் ஜெயித்து எம்.எல்.ஏ. ஆனாரா என்பதை தென்காசியில் போய்தான் விசாரிக்க வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக