செவ்வாய், 5 ஜூன், 2012

உண்மையை உரக்கச் சொல்லும் தொலைக்காட்சிகள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய தொலைக்காட்சிகளையும், அரசியல் பின்னணி உள்ள தொலைக்காட்சிகளையும் பின்னுக்கு தள்ளி தன் தனித்திறமையினால் ஒரு ஆண்டுகளுக்குள்ளாகவே முன்னணிக்கு வந்து விட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதற்கான காரணம் அந்த தொலைக்காட்சி வழங்கும் செய்தியின் தன்மையும், நிகழ்ச்சிகளில் காட்டும் வித்தியாசமும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் அது பற்றிய ஒரு சின்ன ரவுண்ட் அப்.
தமிழ்நாட்டில் 1992 வரை தூர்தர்சன் எனப்படும் அரசு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. அவர்களின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கே வரிசை கட்டி நிற்பார்கள் ஜனங்கள். கேபிள் டிவியின் வரவினாலும் 1993ல் சன் டிவி தொடங்கப்பட்ட பின்னரும் மக்களின் ரசனையே மாறியது.


உங்க வீட்ல சன்டிவி இருக்கா? என்று கேட்பதையே பெருமையாக நினைத்தனர் மக்கள். அப்பொழுது சினிமாதான் பிரதானமாக இருந்தது. அதனால் தொலைக்காட்சியில் சினிமா நடிகர்களின் பேட்டி, சினிமா நடிகர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. செய்தி என்பதெல்லாம் டிடியோடு சரி. சன், ராஜ், ஜெஜெ( இப்போதைய ஜெயா) போன்ற தொலைக்காட்சிகள்தான் போட்டி போட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர்.

அப்பொழுது ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நடந்த நிகழ்வுகளை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு சன் தொலைக்காட்சியில் செய்திகள் தொடங்கப்பட்டன. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்திகளை மக்கள் ஆவலுடன் பார்த்தனர் அவர்களின் விருப்பமும் நிறைவேறியது. இந்த போட்டியில் ஜெஜெ டிவி சில வருடங்கள் காணமல் போய் பின்னர் அது ஜெயா டிவியாக உருவெடுத்தது.

சன் டிவி குழுமத்தில் இருந்து 24 மணிநேர செய்திகளை ஒளிபரப்ப சன் நியூஸ் தொடங்கப்பட்டது. அதேபோல் ஜெயா டிவியில் ஜெயா ப்ளஸ் தொடங்கப்பட்டன. சீரியல் போன்ற ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் மட்டும் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டன. இதனிடையே சகோதர யுத்தத்தில் 2007 செப்டம்பர் 15ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி உதயமானது. அது சன், ஜெயா, தொலைக்காட்சிகளுக்கு மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்தது.

திமுக ஆளும்கட்சியாக இருந்த காரணத்தினால் விளம்பரங்கள் அதிக அளவில் குவிந்தன. சில நிறுவனங்களிடம் மிரட்டியும் வாங்கப்பட்டன!. இதே நிறுவனத்தில் இருந்து 24மணிநேர செய்தி சேனலும் உருவானது.

ஆனால் எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு தொலைக்காட்சி உதயமானது. புதிய தலைமுறை பத்திரிக்கை இளைஞர்களை கவரும் பத்திரிக்கையாக வெற்றி பெற்றிருந்ததால் அதே பெயரே தொலைக்காட்சிக்கும் சூட்டப்பட்டது. முன்னணி நிறுவனங்களில் இருந்த பணியாளர்களுக்கு எல்லாம் சம்பளத்தை கொட்டிக்கொடுத்து புதிய தலைமுறைக்கு அழைத்து வந்தனர்.

புதிய களம், புதிய நிகழ்ச்சிகள், புதிய கோணம் என புதுமையாக இருந்த காரணத்தால் எந்த ஒரு ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் இல்லாமலேயே புதிய தலைமுறை முதலிடத்தை எளிதில் எட்டியது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 2012 மே 12 ம் தேதிவரை TAM எனப்படும் டெலிவிஷன் ஆடியன்ஸ் மெசர்மென்ட் எடுத்த கணக்கெடுப்பின் படி புதிய தலைமுறை தொலைக்காட்சிதான் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

புதிய தலைமுறை ரேட்டிங்கில் 29.15 சதவிகிதம் என்றால் சன் நியூஸ் 16.39 சதவிகித இடம் பெற்றுள்ளது. இது சன் குழுமத்திற்கு மிகப்பெரிய போட்டியாக உருவெடுத்துள்ளது. இதற்கு அரசு கேபிள் தொடங்கப்பட்டதும் ஒரு காரணம் என்கின்றனர்.

சன் குழுமத்தின் சுமங்கலி கேபிள் விஷன் மட்டும் இருந்தால் புதிய தலைமுறை இந்த அளவிற்கு மக்களை சென்றடைந்திருக்காது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சன் தொலைக்காட்சியின் விளம்பர வருமானம் கூட குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவினர் ஜெயா தொலைக்காட்சியை பார்க்கின்றனர், திமுகவினர் கலைஞர், சன் தொலைக்காட்சியை பார்க்கின்றனர் ஆனால் நடுநிலையான மக்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியை பார்க்கின்றனர். உண்மையை உரக்கச் சொல்வோம் என்னும் தாரக மந்திரத்துடன் தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி பிற சேனல்களுக்கு சிம்ம சொம்மனமாக உருவெடுத்துள்ளது என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: