செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

Latest Joke உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.


ண்ணா ஹசாரேவுக்கு பெருகி வரும் ‘ஆதரவைப்’ பார்த்தால் பயமாக இருக்கிறது. பெயிட் நியூஸ் புகழ் டைம்ஸ் நௌ சேனலில் தொடங்கி என்.டி.டிவியின் தரகு வேலை புகழ் பர்க்கா தத், மாஃபியா உலகத் தொடர்பு மற்றும் கறுப்புப் பண புகழ் பாலிவுட் நடிகர்கள்,  கவர்ச்சிப் பத்திரிகை புகழ் ஷோபா டே, ஆயிரம் ஆ.ராசாக்களுக்கு இணையானவர் என்று தொடர் மின் அஞ்சல்களினால் புகழடைந்துள்ள சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், எடியூரப்பா புகழ் பாரதிய ஜனதா, வசூல்ராஜாவில் இளைஞர்களை போட்டுத் தாக்கிய சீனா தானா புகழ் ராக்கி சாவந்த், மற்றும் மலேசிய ஊழல் புகழ் டத்தோ சாமிவேலுவின் ஒரே இலக்கிய நண்பர் ஜெயமோகன் என்று நாட்டில் வாழும் உத்தமர்கள் எல்லாம் அண்ணா ஹசாரேவை ஆதரிக்கிறார்கள்.
ஊருக்கு உழைத்த உத்தமராம் அண்ணன் ஆட்டோ சங்கரை மட்டும் இந்தக் கேடு கெட்ட அரசு தூக்கில் போடாமல் இருந்திருந்தால் அவரும் கூட ஆதரித்திருப்பார். இன்னொரு உத்தமரான ஹர்ஷத் மேத்தா நெஞ்சு வெடித்துச் செத்துப் போனதால் அவருக்கும் வாய்ப்புக் கிடைக்காமலேயே வைகுண்டம் போனது ஒரு சோகம் தான். ஆக்கிரமிப்புப் புகழ் அமெரிக்காவே ஆதரித்திருப்பதால் அவ்விடத்தின் விசேடத் தயாரிப்பான பின்லேடனும் கூட ஆதரித்திருப்பார். துரதிருஷ்டவசமாக அன்னாரும் அல்லாவின் சொர்க்கத்தை அடைந்து விட நேர்ந்து விட்டதால் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்.
உச்ச கட்டமாக, கடந்த சில நாட்களாக கற்பழிப்புகளின் தலைநகரம் என்று போற்றப்படும் தில்லி மாநகரத்தில் எந்த கற்பழிப்புச் சம்பவங்களோ கொலை சம்பவங்களோ இடம் பெறவில்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தில்லி நகரத்தில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் துவங்கிய பின் குற்றச்சம்பவங்கள் 35% அளவிற்குக் குறைந்துள்ளதாக போலீசு உயரதிகாரிகளே தெரிவித்ததாக அச்செய்திக் குறிப்பில் காணப்படுகிறது. ஏதோ நல்லது நடந்தால் சரி தான். ஆனால், இந்த ‘நல்லது’ இன்னும் கொஞ்சம் நாட்கள் தொடர வேண்டுமானால் மேற்படி காரியங்களில் ஈடுபடும் யோக்கியர்களை ராம்லீலா மைதானத்திலேயே இருக்கச் செய்வது அவசியம். அதற்கு அண்ணா இன்னும் கொஞ்சம் நாட்கள் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டும். அதற்கு காங்கிரஸ் மனது வைக்க வேண்டும்.
இவ்வாறாக நாடும் நாட்டிலுள்ள நல்லவர்களும் அண்ணாவின் பின்னே திரண்டிருப்பதாகவும் மான ரோசமுள்ளவர்கள் அனைவரும் இதில் தமது பங்களிப்பைச் செலுத்தியே வேண்டும் என்று ஊடகங்கள் கொலைவெறியோடு கூத்தடித்துக் கொண்டிருந்த சூழலில் தான் நமது வினவு தளத்தின் சென்னைப் பகுதி செய்தியாளர்களுக்கு அப்படி ஒரு யோசனை தோன்றியது. பதிவுலக புகழ் குருஜி போன்ற அறிவு ஜீவிகளே மெய்யுலகில் அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு அலைமோதுவதாக சத்தியமடிக்காத குறையாக தெரிவித்திருந்ததால், நாம் சென்னையில் அண்ணா ஹசாரேவுக்காக நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தைச் சென்று பார்த்து வந்தால் என்னவென்று யோசிக்க, 20ம் தேதி என்று அதற்கு நாங்கள் நாள் குறித்தோம். தமிழகத்தில் அண்ணாவுக்காக ஊழலை எதிர்த்து சண்டமாருதம் செய்யும் அந்த கனவான்கள் யாரென்று அறிந்து கொள்வதில் ஒரு த்ரில் இருந்தது.

கருத்துகள் இல்லை: