வியாழன், 25 ஆகஸ்ட், 2011

விழிப்புக் குழுக்கள் அமைப்பது பற்றி டக்ளஸ் தலைமையில் ஆராய்வு


douglas-4யாழ் குடாநாட்டின் மேலும் சில பகுதிகளில் மர்ம மனிதன் தொடர்பான வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து கிராமங்களில் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பகுதிகளில் மர்ம மனிதன் நடமாட்டம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பொதுமக்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

நாவாந்துறை, பாஷையூர் பிரதேசங்களில் 100 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், 95 பேர் தடுத்துவைக்கப்பட்டனர். அதேநேரம், இருபாலை மற்றும் மல்லாகம் பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்ததாக வெளியான வதந்திகளைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் புதிதாக ஏற்பட்டிருக்கும் மர்ம மனிதன் பிரச்சினையைத் தொடர்ந்து கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பது பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றுமுன்தினம் ஆராயப்பட்டது.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் நீர் தளுவத்த உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைப்பதன் ஊடாகவே இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமென்றும், விழிப்புக் குழுக்களுக்கு அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட வேண்டுமென்றும் பொலிஸார் தரப்பில் கூறப்பட்டது. இவ்வாறு தெரிவுசெய்யப்படும் குழுக்களுக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உறுதிமொழி வழங்கினார்.

விழிப்புக்குழுக்களை அமைப்பதானது மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டும் அதேநேரம், கொலை, கொள்ளை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு முடிவுகட்டும் வகையில் அமையும் என இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். விழிப்புக் குழுக்களுக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும்போது சரியானவர்களைத் தேர்வுசெய்வது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பிழை செய்பவர்கள் ஈ.பி.டி.பி. கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அரச தரப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக நிச்சயம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதேநேரம், நாவாந்துறை மற்றும் பாஷையூர் பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து காயமடைந்த 82 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சம் காரணமாக இரவுவேளையில் தேவாலயத்திலேயே தங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: