புதன், 20 அக்டோபர், 2010

விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம்.

வேதங்களை இயற்றிவர்கள் பார்ப்பனரா? வேதாந்தத்துக்கு ஆதாரமாய் இருப்பவை உபநிடதங்கள்; வேதங்களிலுள்ள இந்தப் பகுதிகள் ஷத்திரியர்களால் இயற்றப்பட்டவை என்பது சுவாமிஜியின் கருத்து. இது பிராமணர்கள் மகத்தான காரியங்களை இந்தியாவுக்கு செய்தார்கள் என்ற கருத்தோடு மாறுபடுகிறது.

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர். பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார். அந்தக் கருத்துகளைத் தொகுத்து அடியில் தந்திருக்கிறோம்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை (3.280)

முன் காலத்திலே ரிஷிகள் ஆனோர் பலர். வசிஷ்டர் பிறப்பினால் இழிந்தவர்; வியாசர் மீனவப் பெண்ணுக்குப் பிறந்தவர்; நாரதர் பணிப்பெண்ணின் பிள்ளையாகப் பிறந்தவர். இவ்வாறு பிறந்தவர்கள் பலர் ரிஷிகள் ஆனார்கள் (6.433).

முகம்மதியர் நுழைவுக்குப் பார்ப்பனர் காரணம்

நெடுங்காலமாகத் தான் சேகரித்து வைத்திருக்கும் ஞானத்தைப் பிராமணன் இப்பொழுது பொது ஜனங்களுக்கு அளிக்க வேண்டும், இங்ஙனம் அவன் கொடுக்காத காரணத்தினால் முகம்மதியப் படையெடுப்புகள் சாத்தியமாயின. (6.234)

குமரிலர், சங்கரர், ராமானுஜர் போன்ற முனிவர்கள், பிராமணர் சக்தியை மீண்டும் நிலைநாட்ட முயன்றனர். சிறிது காலம் அச்கத்தி இராசபுத்திர அரசரது வாளின் ஆதரவையும் பெற்றது. சமண புத்த எதிரிகளின் வீழ்ச்சிக்குப்பின், அது தனது அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கவும் முயன்றது. ஆயினும், அது, முகம்மதியரது ஆட்சியின் கீழ் என்றைக்கும் உறங்கும்படி செய்யப்பட்டது. (1.172)

நானூறு தலைமுறையாக
வேதத்தை தொடாத பார்ப்பனர்கள்


இந்த அயோக்கியப் புரோகிதர்களோ, அல்லது இவர்களுடைய முன்னோர்களோ, சென்ற நானூறு தலைமுறைகளாக, வேதப் புத்தகம் ஒன்றைக் கூடப் பார்த்தது இல்லை. கலியுகத்துப் பிராமண ரூபத்தில் இருக்கின்ற இராட்சசர்களிடமிருந்து இந்த அப்பாவி மக்களை, இறைவா! காத்து இரட்சிப்பாயாக! (9.126)

--------------------சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் என்ற நூல் (சுவாமி விபுலானந்தர் மொழி பெயர்ப்பு) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர் சென்னை -4 (1965
ஜாதிகளை ஏற்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்

சங்கராச்சாரியார் முதலிய பெரியோர்கள் ஜாதிகளை யேற்படுத்தினவர்கள் அவர்கள் செய்தனவெல்லாம் சொல்வேனாகில் நீங்கள் சிலர் என்மீது கோபம் கொள்வீர்கள். ஆனாலும், என்னுடைய யாத்திரைகளிலும், என் அனுபவத்திலும் ஏற்பட்டவரையில் அவர்கள் செய்த காரியங்களின் முடிவு வெகு விரோதமாகவே தோற்றுகின்றது. அவர்கள் கும்பல் கும்பலாய்ப் பெலுச்சிஸ்தானம் தேசத்தாரைப் பிடித்து ஒரே நிமிஷத்தில் ஷத்திரியராக்கிவிடுவதும், வலையர் கூட்டத்தை ஒரே ஷணத்திற் பிராமணராக்கிவிடுவதுமாகிய இவையெல்லாம் செய்தார்கள் - பக்கம் 434

உலகம் ஒப்பும் ஒரு தத்துவ சாத்திரமுண்டா?

உலக முழுமைக்கும் ஸமரஸமாயுள்ள ஒரே தத்துவ சாத்திரம் ஏதேனுமிருக்கின்றதா? இது காறும் இல்லை. ஒவ்வொரு மதமும் தன்கொள்கைகளையே எடுத்துக் காட்டி அவற்றையே உண்மையென வற்புறுத்துகின்றது. அஃது இவ்வளவு வற்புறுத்துவதுடன் மாத்திரம் நில்லாது, அஃது உண்மையெனக்கூறும் உண்மைகளை நம்பாதவர்கள் பயங்கரமான ஓரிடத்திற்குப் போகவேண்டுமென்றும் பயமுறுத்துகின்றது. இஃது அவர்களது இயற்கையான துஷ்டத் தன்மையால் உண்டாவது என்று நினைக்கக்கூடாது. மற்றென்னையெனின், அது மனிதர்களது மூளையைச் சம்பந்தித்த மதாவேசம் என்னும் ஒரு வித வியாதி விசேஷமாம்.
ஆதிசங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர்
ஆணவக்காரர், இதயமில்லாதவர், கொலைகாரர்


சுவா: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது. அவர் வாதம் புரிவதில் வல்லவர் மஹா பண்டிதர், அதில் அய்யமில்லை, என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை, அவருடைய இதயமும்அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக்காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார் போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார். அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கிடமாகின்றன. விதுரன் பிரம்ம ஞானத்தை அடைந்தான். அது முற்பிறவியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தால் என்கின்றார். நல்லது, இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந்தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற்பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகையை ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராமாணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில்தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாததொன்று. வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது. வாதத்திலே தோல்வியுற்றோம் என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன! புத்தர் தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக. சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர். பஹூஜன ஹிதாய பஹூஜன ஸூகாய பலருடைய சுகத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

உண்மையே உருவெடுத்தவர் புத்தர்

சிஷ்: அய்ய, புத்ததேவர் இப்படிச் செய்ததையும் மற்றொரு வகை மூடப்பிடிவாதமென்று நாம் சொல்லுதல் கூடாதா? அவர் இழிவான ஒரு விலங்கின் பொருட்டுத் தம்முடைய சொந்த உடலைக் கொடுத்து விட நினைத்தாரே!

சுவா: ஆனால் இந்த மூடப் பிடிவாதத்தினால் உலககுக்கு எவ்வளவு நன்மை விளைந்ததென்பதை எண்ணிப் பார்! எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்திய சாலைகள், விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன என்பதை நினைத்துப்பார்! சிற்பம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது? ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்ததேவர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன்படுத்தும் நெறிகளைக் காட்டினார். இங்ஙனம் நோக்கும்போது, அவர் உண்மைவேதாந்தம் உருவெடுத்தது போன்றவர் ஆவார்.

-------------- நூல்:- சுவாமி விவோகானந்தர்

கருத்துகள் இல்லை: