ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

நக்கீரனில் ஜெகத் கஸ்பார் அடிகள் !அந்த கடைசி நாட்களில் நடந்தது

டி.பி.எஸ். ஜெயராஜ் ஓர் இதழியலாளர். ஆங்கிலத்தில் நன்றாக எழுதும் ஆற்றல் பெற்றவர். ஈழத் தமிழர். சுமார் 20 ஆண்டுகளாய் கனடா நாட்டில் வாழ்ந்து வருபவர். மிகக் குறுகியதோர் காலக்கட்டம் தவிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரமாக விமர்சித்து வருபவர். இவர் கொழும்பு நகரிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்' (Daily Mirror)  நாளிதழுக்காய் புலிகளின் முன்னாள் அனைத் துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கே.பி. (K.P.) என்ற குமரன் பத்மநாபனை நேர்கண்டு உரையாடி மூன்று கட்டுரைகள்எழுதியிருக்கிறார்.
அதில் 2009 இறுதிக்கட்ட போரின்போது சண்டை நிறுத்தம் கொணர இந்தியா முயன்ற தாகவும் அதனை சீர்குலைத்தது சில தமிழக அரசியற் தலைவர்கள் என அவர்தம் பெயர்களையும் வெளிப்படையாகக் குறிப்பிட்டிருப்பது உலகத்தமிழரிடையே தீவிர விவாதத்திற் குள்ளாகியிருக்கிறது. சண்டை நிறுத்த முயற்சிகளில் கே.பி. எனது பெயரையும் குறிப்பிட்டிருந்தமையால் கடந்த சில நாட்களாய் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் விசாரித்து வருகின்றனர்.
கே.பி. கூறியிருப்பதொன்றும் புதிய செய்தியல்ல. ஏற்கனவே ""மறக்க முடியுமா'' தொடரில் நான் விரிவாக எழுதிய விஷயம்தான். ஆனால் ஈழப் பிரச்சினையில் ஏற்கனவே பிரிந்தும், பிளவுண்டும், குழம்பியும்,நொறுங்கியும் கிடக்கிற உணர்வாளர்களை மேலும் மனச் சோர்வடையச் செய்ய வேண்டாம் என்ற அக்கறையில் எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை.
கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் ஒருமுறை மனம் நொந்து குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. ""நானும் பார்த்து விட்டேன், ஈழப்பிரச்சினையில் ஒருவர்தானும் இங்கு நேர்மையான வர்களாய் இல்லை''. -அவரது கூற்று நூறு சதம் உண்மை.
தனிநபர்கள், தலைவர்கள், இயக்கங்கள் மட்டில் நாம் உள்ளார்ந்த உணர்வுகளால் வசீகரிக்கப்பட்டு நாமே நம்மையுமறியாமல் உருவாக்கிக் கொள்ளும் புனித மாயைகளை துணி வுடன் அகற்றி அறிவின் துணைகொண்டு உண்மையைத் தேடினாலொழிய இந்த இனத்திற்கான பயணத் திசையை நாம் இன்னும் பல்லாண்டுகளுக்குக் கண்டறிய முடியாதென்பது மட்டும் கசப்பான நிஜம்.
கே.பி.யின் குற்றச்சாட்டினை நிராகரிக்கிறவர்களுக்கு இரண்டு வாதங்கள் வசதியாக வந்து நிற்கின்றன. முதலாவது வாதம் விடுதலைப் போராட்டத்தினை அழித்திட சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசுக்கு பல்வேறு உதவிகளும் புரிந்த இந்தியா சண்டை நிறுத்தம் கொணர முயற்சி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்பது. இரண்டாவது வாதம் கே.பி. இன்று ஒரு துரோகி. அவர் சிங் களப் பேரினவாதத்தின் கைக்கூலியாக இன்று செயல்படுகிறார் என்பது. இரண்டு வாதங்களிலும் உண்மை உண்டு. அதே வேளை இந்த இரண்டு உண்மைகளோடு தொடர்புடைய வேறு உண்மை களும் உண்டு. அவை என்ன?
கே.பி. இன்று சிங்களப் பேரினவாதத்தோடு ஒத்துழைப்பவர் தான். அதில் ஐயமில்லை. அவருக்கு வேறு வழியும் இல்லை. மாட்டிக் கொண்டபின் ஒன்றேல் சித்திரவதைகளுக்குள்ளாகி மடிய வேண்டும், இன்றேல் ஒத்துழைத்துப் பிழைத்துக் கொள்ள வேண்டும். பிழைத்திருக்க அவர்  முடிவு செய்திருக்கிறார். ஈவிரக்கமின்றி இன அழித் தல் செய்த பாவிகளோடு வாழ்வது அவருக்கான வரலாற்றுச் சாபம்- வரலாறு அவரை நிச்சயம் விடுதலை செய்யாதுதான். அதேவேளை கே.பி. தமிழினம் கண்ட அபார ஆற்றல்கள் கொண்ட ஒரு மிகப்பெரிய போராளியும் கூட. வெறுங்கையோடு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் நம்பிக்கையை  மட்டும் உணர்வாதாரமாய் கொண்டு வெளிநாடு பயணித்த கே.பி. தனியொரு மனிதனாய் புலிகளின் அனைத்துலக ஆயுதக் கொள்வனவு வலைப் பின்னலை கச்சிதமாகக் கட்டியெழுப்பியவர். உலகெங்கும் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத் திற்காய் பலநூறு கோடிகள் புரளும் பன்னாட்டு வர்த்தகத்தை உருவாக்கியவர். கடல்வழிப் பாதையில் தமிழனும் ஆளுமை செலுத்திய ஓர் காலத்தை நாற்பதுக்கும் மேலான வர்த்தகக் கப்பல்களை ஓட்டி வரலாறு சமைத்தவர். கே.பி. என்றொரு ஆளுமை இல்லையென்றால் தனித்தமிழ் ஈழத்திற்கு வெகு அருகில் வந்த ஆனையிறவு வரையான போர்க்கள வெற்றிகள் சாத்தியப் பட்டிருக்காது. அது கே.பி.யின் பொற்காலம்.
ஆனையிறவு வெற்றிக்குப்பின் வந்த அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தில் கே.பி. பதவியிறக்கம் செய்யப்பட்டார். அவர் செய்த தவறுகள் என்னவென்று எனக்குத் தெரியாது. அவரோடு உலகெங்கும் பல்வேறு நாடுகளுக்குப் பொறுப்பாயிருந்த விடுதலைப் போராட்ட பொறுப்பாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர். அவர்களில் பலர் ஒவ்வொரு செங்கல்லாய் விடுதலைப் பேரியக்கத்தை புலம் பெயர் நாடுகளில் கட்டியெழுப்பியவர்கள். அவர்கள் கட்டியெழுப் பிய கோபுரத்தில் அமர்ந்து கோலோச்சப் புறப்பட்டு வந்தவர்கள் "காஸ்ட்ரோ குழுவினர்'. இவர்களின் முகமாக வெளிநாடுகளில் இன்று அறியப்படுகிறவர் நெடியவன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சுமார் இருபது ஆண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறவ னென்ற வகையில்இந்த விடுதலைப் போராட்டம் இத்துணை மோசமான அழிவினை சந்திக்க பல்வேறு காரணங்களென்றாலும் முதற்காரணம் இந்த காஸ்ட்ரோ குழுதான். முள்ளிவாய்க்கால் கொடுமை நடந்த காலத்தில் "வணங்கா மண்' கப்பலை வைத்து இவர்கள் அடித்த கொள்ளையின் கணக்கைக் கேட்டாலே தமிழ் வரலாறு காறி உமிழும். இன்றும் உலக அளவில் விடுதலைப் போராட்டம் சேமித்த சொத்துக்களை கட்டுப்படுத்துவது இவர்கள்தான். தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களாய் காட்டிக்கொள்கிற தலைவர்கள் பலரும் இந்த காஸ்ட்ரோ குழுவின் ஆதரவாளர்கள் என்பதும் முக்கியமானது.
தமிழீழ மக்களின் அரசியற் சிக்கலை ஓரளவு அனுசரணையுடன் அணுகி வந்த ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்திடக் காரணமாக இருந்தவர்கள் இந்த "காஸ்ட்ரோ குழு' புண்ணியளர்கள்தான்.
ராஜபக்சேக்களின் ரத்தவெறி போர் கண்டும் மேற்குலகம் பாராமுகம் காட்டியமைக்கு  சகல பொறுப்பும் காஸ்ட்ரோ குழுவினரின் பொறுப்பற்றஅணுகுமுறைதான்.
இரண்டாவது இந்தியா தொடர்பான கேள்விக்கு வருவோம்.  ஒன்றை நாம்  தெளிவாகப் புரிந்துகொள்வோம். அன்றும் சரி, இன்றும் சரி -இந்திய அதிகார அமைப்பு
தமிழரை ஒரு பொருட்டாக மதித்ததில்லையென்பதே உண்மை. லட்சக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்களை நாடற்றவர்களாக்கிய சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் தொடங்கி, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோதும், தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் சிங்கள தேசத்தை சங்கோஜம் ஏதுமின்றி "நேச நாடு' என வெளிப்படையாகவே கொண்டாடுவதுவரை... தமி ழரை ஒரு பொருட்டாக இந் திய அதிகார அமைப்பு கருத வில்லை என்பதே உண்மை. பிரதமர், அமைச்சர் பெரு மக்களுக்கெல்லாம் அப்பால் இந்த நாட்டுக்கான முக்கிய கொள்கைகளை வகுக்கிற அதிகாரக் கூட்டம் தமிழர் களை வெறுக்கிற தென்பதே உண்மை. இவர்களை எதிர் கொள்கிற பெரும் அறிவுக் கூட்டமொன்று  தமிழகத்தி லிருந்து எழுகின்றவரை அது தொடரத்தான் செய்யும்.
தமிழீழத்தை என்றுமே இந்திய அதிகார அமைப்பு விரும்பவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளை ஒரு காலத்தில் அது விரும்பியது. உண்மையில் தென்புலத்தில் தனது  பிராந்திய அபிலாஷைகளுக் காக இந்திய அதிகார அமைப்பு உருவாக்கிய முதல்  'நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ ஹள்ள்ங்ற்'  -விடுதலைப்புலிகள் இயக்கம். பொதுவாக நம்மிடையே நிலவும் ஓர் கருத்து 1983 ஜூலைகலவரங்களுக்குப் பின்னர்தான் இந்தியா போராளிகளுக்குப் பயிற்சி தரத் தொடங்கிய தென்பது. அது உண்மையல்ல. பிரபாகரனும் உமாமகேசுவரனும் 1982-ல் பாண்டிபஜாரில் துப்பாக்கி மோதல் நடத்தினார்களென்பது பதிவு. எனில், தனக்காக,  தனது நலன்களைப் பேணுவதற் கான அடியாட்களாக விடுதலைப்புலிகள் இயக்கத் தை கட்டமைக்க கலவரங்களுக்கெல்லாம் முன்னரேயே  இந்திய அதிகார அமைப்பு விரும்பி யிருக்கிறது. ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூலிப்படைத் தலைவனாகக் குறுகிப்போக விரும்பவில்லை -விடுதலை வேங்கையாக வரலாறு படைக்க விழைந்தார் -எனவே இந்திய அரசமைப்பு அவரை வெறுத்தது. தான் கிழித்த எல்லைக் கோடு களைக் கடந்து கைவிட்டுப் போய்விட்ட 'Stratagic asset' -ஆகக் கருதிப் பொருமியது. அவரை அழிக் கவும் வரிந்து நின்றது. ஒருகட்டத்தில் "பிரபாகரன் இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்' என்ற கொள்கையைக்கூட இந்திய அதிகார அமைப்பு வைத்திருந்தது.ஆக, வேலுப்பிள்ளை பிரபாகரனை அழிக்க விரும்பிய இந்தியா எப்படி சண்டை நிறுத்தத்திற்கு முயன்றிருக் கக்கூடும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். ஆயினும் இரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதே உண்மை. ஒன்று 2009 ஜனவரி இறுதி வாரம் தொடங்கியும், இரண்டாவது ஏப்ரல் இறுதி வாரத்திலும்.ஆனால் இவை தொடர்பான விப ரங்களை கே.பி. நேரடியாக அறிந்திருந் தது போலும் தெரியவில்லை. அவரது நேர்காணலை வெளியிட்ட டெய்லி மிர்ரர் நாளிதழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மகேந்திரன் அவர்களது பெயரைக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அந்த மகேந்திரன் ஐயோ பாவம். அவருக்கும் இதற்குமெல்லாம் சம்பந்தமே இல்லை. அதே பெயரினைக் கொண்ட பிறிதொரு காம்ரேட் தோழருக்குப் பதில் இவர் மாட்டிக்கொண்டு விட்டார். அதே வேளை சண்டை நிறுத்த முயற்சிகள் வென்றுவிடாதபடி தமிழகத்தின் ஈழ ஆதரவுத் தலைவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது, குறிப்பாக நடேசன்அவர்கள் மீது தீரா அழுத்தம் கொணர்ந் தார்கள் என்பதும் உண்மை.
(வரும் இதழில்)

கருத்துகள் இல்லை: