வியாழன், 31 ஆகஸ்ட், 2023

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

மின்னம்பலம் - christopher : தொடர் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வந்த நெல்லை மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திமுக தலைமைக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
நெல்லை மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே அவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர்.
கடந்த ஜூலை 27 ஆம் தேதி மாமன்ற கூட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர்கள் மேயர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து “மதிப்பிற்குரிய உறுப்பினர்களே” என்று மேயர் சரவணன் பேச ஆரம்பித்த உடனே திமுக கவுன்சிலர்கள் அனைவரும் அவரது பேச்சை புறக்கணித்து வெளியேறினர்.


தொடர்ந்து வார்டில் நடைபெறும் ஒவ்வொரும் பணிக்கும் கமிஷன் கேட்கும் சரவணனை மேயர் பதவியில் இருந்து நீக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் மற்றும் அமைச்சர் உதயநிதிக்கும்,  45 திமுக கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை அறிவாலயத்தில் திமுக தலைமையை, நெல்லை மேயர் சரவணன் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் நெல்லை மேயர் சரவணன் திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினமே (ஆகஸ்ட் 29) தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் இதுகுறித்து தலைமை இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் திரும்பி வந்ததும் இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் திமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருத்துகள் இல்லை: