thesamnet - அருண்மொழி : ஆப்பிரிக்க நாடான சிம்பாப்வேவில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு அதிபர் தேர்தல் கடந்த 23, 24-ந் திகதிகளில் நடந்தது. இதில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா, எதிர்க்கட்சித் தலைவர் நெல்சன் சமிசா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதில் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா 52.6 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசா 44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதி எம்மர்சன் மங்கக்வா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவை எதிர்க்கட்சி ஏற்க மறுத்து உள்ளது.
தேர்தல் 23-ந்திகதி ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட இருந்தது.
ஆனால் வாக்கு சீட்டு அச்சடிப்பதில் ஏற்பட்ட தாமதம், சிக்கல்கள் காரணமாக 24-ந்திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஜனாதிபதி தேர்தல் முடிவு நாளை வெளியிடப் படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஒரு நாள் முன்னதாக தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ராபர்ட் முகாபே அரசு, இராணுவ புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது.
அதன்பின் இடைக் கால அதிபராக எம்மர்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பின் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த தேர்தலில் எம்மர்சன் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
இதனால் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை எம்மர்சன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார்.
தற்போது 2-வது முறையாக எம்மர்சனின் வெற்றியை எதிர்க்கட்சி ஏற்காததால் போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக