திங்கள், 28 ஆகஸ்ட், 2023

உ.பி.யில் முஸ்லிம் மாணவரை அடிக்குமாறு ஆசிரியை தூண்டியது ஏன்? அவரை காப்பாற்ற காவல்துறை முயற்சியா?

BBC News தமிழ் - , AMIT SAINI,  உத்தர பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் வகுப்பில் இருந்த ஒரு முஸ்லிம் மாணவரை மற்ற குழந்தைகளிடம் அடிக்குமாறு தூண்டிவிடுவதாக ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் காட்டப்படும் சம்பவத்தில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது. அதுகுறித்து அந்தக் குழந்தையின் தாயிடம் பேசியபோது.
அப்போது அவர், “அந்த ஆசிரியை முஸ்லிம்களுக்கு எதிரானவராக இருப்பதைத்தான் இந்தச் செயல் காட்டுவதாக” கூறினார்.
ஆனால், இந்தச் சம்பவத்திற்கு மதச் சாயம் பூசப்படுவதாக வீடியோவில் காணப்படும் ஆசிரியை குற்றம் சாட்டுகிறார்.
முஸ்லிம் மாணவர் தாக்கப்படும் வீடியோவில் என்ன இருந்தது?
இந்தச் சம்பவம் முசாஃபர்நகரிலுள்ள கப்புபூர் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநரும் ஆசிரியையுமான திரிப்தா தியாகிதான் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர். அவர் தனது சொந்த வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி நடத்தி வருகிறார்.



குழந்தையின் தந்தை இர்ஷாத் அளித்த புகாரின்பேரில் மன்சூர்பூர் காவல்நிலையத்தில் ஆசிரியை திரிப்தா தியாகி மீது ஐபிசி 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே கிராமத்தில் வசிக்கும் இர்ஷாத் என்பவரின் இளைய மகன் அந்தப் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். திரிப்தா தியாகி மற்ற மாணவர்களை இர்ஷாத்தின் மாணவரை தாக்கத் தூண்டியதாகச் சொல்லப்படும் வீடியோ ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அந்தப் பள்ளியில் எடுக்கப்பட்டது.

அந்த வீடியோவில், திரிப்தா தியாகி இர்ஷாத்தின் குழந்தையை அடிக்குமாறு மற்ற மாணவர்களைத் தூண்டிவிடுவதையும், ‘முகமதிய குழந்தைகளைப் பற்றிய கருத்துகளை’ கூறுவதையும் காண முடிகிறது.

இதுகுறித்து தாக்கப்பட்ட மாணவரின் தந்தை இர்ஷாத் பேசும்போது, “ஆசிரியை என் மகனை அடிக்க மற்ற குழந்தைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார். ஏதோ வேலையாக அந்தப் பக்கம் சென்ற எனது மருமகன், என் மகனை அடிப்பதைப் பார்த்து வீடியோ எடுத்து வந்து எங்களிடம் காட்டினார்.

அன்று நான் சுமார் 3 மணியளவில் பள்ளிக்குச் சென்றேன். ஆனால் ஆசிரியை தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, அங்கே அதுதான் விதி என்று கூறினார். நாங்கள் இரண்டு முறை சென்றோம். அவர் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. அதற்குப் பிறகுதான், நாங்கள் அந்த வீடியோவை வைரலாக்கினோம்,” என்று தெரிவித்தார்.

ஆசிரியை மீது சரியான குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவாகவில்லையா?

திரிப்தா தியாகி மற்ற மாணவர்களை இர்ஷாத்தின் மாணவரை தாக்கத் தூண்டியதாகச் சொல்லப்படும் வீடியோ ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று அந்தப் பள்ளியில் எடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாணவரின் தந்தை அதுகுறித்துப் புகாரளித்தார். பள்ளி ஆசிரியர் திரிப்தா தியாகி மீது ஒருவரை காயமுறச் செய்வது, வேண்டுமென்றே அவமதிப்பது போன்றவற்றுடன் தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கத்தௌலி போலீஸ் அதிகாரி டாக்டர் ரவிசங்கர் மிஸ்ரா இதுகுறித்துப் பேசியபோது, “குழந்தையின் தந்தை இர்ஷாத் அளித்த புகாரின்பேரில் மன்சூர்பூர் காவல்நிலையத்தில் நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் திரிப்தா தியாகி மீது ஐபிசி 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி பார்த்தால், குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான கருத்துகளுக்கு எதிராகப் பதிவு செய்யப்படும் 123ஏ என்ற சட்டப்பிரிவை மாவட்ட காவல்துறை இந்த வழக்கில் பயன்படுத்தவில்லை. இதனால், ஆசிரியை திரிப்தி தேசாயை காப்பாற்ற உத்தரபிரதேச காவல்துறை முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, “விசாரணை நடந்து வருகிறது. உண்மை எதுவாக இருந்தாலும் அது வெளிச்சத்திற்கு வரும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

ஆசிரியை முஸ்லிம்களுக்கு எதிரானவர் – கொதிக்கும் மாணவரின் தாய்

"ஆசிரியை தவறு செய்துவிட்டார். அவர் குழந்தையை அடித்திருக்கக் கூடாது," என்று கூறுகிறார் மாணவரின் தாய் ரூபினா.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய குழந்தையின் தாய் ரூபினா, “ஆசிரியை தவறு செய்துவிட்டார். அவர் குழந்தையை அடித்திருக்கக்கூடாது,” என்று தெரிவித்தார்.

மேலும், “ஆசிரியை முஸ்லிம்களுக்கு எதிரானவர் போல இருக்கிறது. இதற்கு அதுதான் அர்த்தம்,” என்று கூறினார்.

ஆனால், இந்த விஷயத்தில் “இந்து-முஸ்லிம் பிரச்னை இல்லை. குழந்தையை அடித்தது மட்டுமே பிரச்னை,” என்று உறுதியாகக் கூறுகிறார் மாணவரின் தந்தை இர்ஷாத்.

சதித் திட்டத்தால் புனையப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டும் ஆசிரியை

மறுபுறம் நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் திரிப்தா தியாகி, இந்தச் சம்பவத்திற்கு வகுப்புவாத வண்ணம் பூசப்படுவதாகக் கூறுகிறார்.

“இது புனையப்பட்ட வழக்கு. ஒரு சதித்திட்டத்தால் நான் சிக்க வைக்கப்பட்டேன். நான் எந்தக் குழந்தையையும் இந்து-முஸ்லிம் என வேறுபடுத்திப் பார்க்கவில்லை. என் பள்ளியிலுள்ள பெரும்பாலான குழந்தைகள் முஸ்லிம்கள்தான். அந்த மாணவரை அறைந்ததும் முஸ்லிம் குழந்தைதான்,” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக லக்னௌவை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் எஸ்.எம்.ஹைதர் ரிஸ்வி, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார்.

மத அடிப்படையிலான வெறுப்புப் பேச்சை ஆசிரியை ஊக்குவித்தாரா?
மத அடிப்படையிலான சர்ச்சையை குழந்தையின் தந்தை நிராகரித்தாலும், இதுகுறித்து புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தப் புகாரில், மத அடிப்படையில் வெறுப்பு மற்றும் அவமதிப்புகளை ஊக்குவித்த காரணத்திற்காக ஆசிரியர் மீது 153A, 295A, 298 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

“நான் மூன்று வீடியோக்களையும் பார்த்தேன். ஆசிரியர் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகப் பேசுவதை நீங்கள் அதில் பார்க்கலாம். முஸ்லிம் மாணவரை கொல்ல சிறு குழந்தைகளைத் தூண்டிவிடுவதை அதில் பார்க்கலாம். அதனால்தான் சம்பந்தப்பட்ட ஆணையங்களுக்குத் தெரிவித்தேன்,” என்று எஸ்.எம்.ஹைதர் ரிஸ்வி தெரிவித்தார்.

மத அடிப்படையிலான சர்ச்சையை குழந்தையின் தந்தை நிராகரித்தாலும், ரிஸ்வி இதுகுறித்து புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ரிஸ்வி பேசியபோது, “இதற்கான காரணம் தெளிவானது. தந்தை பேசிய முந்தைய வீடியோவை பாருங்கள். அவர் புகார் எதுவும் கொடுக்க விரும்பவில்லை. பிறகு, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும்தான் அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது வெறுப்பை வளர்க்கும் பேச்சுகளுக்கு எதிரான சட்டம் குறித்த உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் செயல். அதன்படி, மாவட்ட காவல்துறை நிர்வாகம் தாமாக முன்வந்து இதில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.

முசாஃபர்நகர் மாவட்ட குற்றவியல் நடுவர் அரவிந்த் மலப்பா பங்காரி, “வைரலாகியுள்ள வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ குழந்தையின் உறவினரால் வைரலாக்கப்பட்டுள்ளது. விசாரணையில் வெளிவரும் உண்மைகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாரா?
நேஹா பப்ளிக் பள்ளியின் இயக்குநரும் மாணவர் வகுப்பில் தாக்கப்பட்ட வீடியோவில் இருந்த ஆசிரியையுமான திரிப்தா தியாகி

இந்நிலையில், நேஹா பப்ளிக் பள்ளியில் இருந்து தாக்கப்பட்ட குழந்தை நீக்கப்பட்டுள்ளது. பள்ளியிலிருந்து குழந்தை நீக்கப்பட்டது குறித்து மாணவரின் தாய் ரூபினா கூறும்போது, “நாங்கள் தாமாக முன்வந்து மகனை பள்ளியில் இருந்து நிறுத்தவில்லை. மகனை அடித்ததாக புகார் கொடுக்கச் சென்றபோது, குழந்தையை வேறு பள்ளியில் படிக்க வைத்துக் கொள்ளுமாறு அவர்கள்தான் கூறினார்கள்,” என்றார்.

மறுபுறம், குழந்தை நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்துப் பேசிய ஆசிரியை திரிப்தா தியாகி, “மாணவர் பள்ளியில் இருந்து நீக்கப்படவில்லை. இது தவறான குற்றச்சாட்டு. அந்த மாணவரின் குடும்பம் புகார் அளிக்க மாட்டோம் என்ற நிபந்தனையின் கீழ் ஆறு மாத கால பள்ளிக் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்,” என்று தெரிவித்தார்.

ஆனால், அந்த மாணவர் தற்போது அந்தப் பள்ளிக்குச் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஒப்பந்தம் காவல்துறை நிர்வாகத்தால் செய்யப்பட்டது என்று ஆசிரியை கூறுகிறார். இருப்பினும் இத்தகைய எந்தவிதமான ஒப்பந்தத்தையும் செய்து கொடுத்ததாக காவல்துறை தரப்பில் கூறவில்லை.

அதேவேளை ரூபினா, “ஆசிரியை தாமாகவே முன்வந்து கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்ததாக” கூறுகிறார்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவரின் தந்தை இர்ஷாத், “ஆசிரியை பிள்ளைகளுக்குள் தகராறு ஏற்படுத்தியுள்ளார். நாங்கள் சமரசம் செய்துகொண்டோம். அவர் எங்கள் கட்டணத்தை திருப்பித் தந்துவிட்டார். இனி என் குழந்தை படிப்பறிவின்றி இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்தப் பள்ளியில் அவர் படிக்க வேண்டியதில்லை,” என்று கூறுகிறார்.

அரசியலாகி வரும் பிரச்னை
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினரின் நிலை குறித்து அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாஜக எம்.பி. வருண் காந்தி, ராஷ்டிரிய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சௌத்ரி ஆகியோர் இந்த வீடியோ குறித்து சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பாஜக ஆட்சியில் சிறுபான்மையினரின் நிலை குறித்தும் இந்தத் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், உத்தர பிரதேச அரசின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் ஜெய்வீர் சிங், “ஆசிரியை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் விசாரணைக்குப் பிறகு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.

மறுபுறம், முசாஃபர்நகரின் மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கப்புபூர் கிராமத்தில், இர்ஷாத் மற்றும் திரிப்தா தியாகியின் வீடுகளைச் சுற்றி பரபரப்பு நிலவுகிறது. அங்கு உள்ளூர் ராஷ்டிரிய லோக்தளத்தின் உள்ளூர் எம்.எல்.ஏ சந்தன் சிங் சௌகான் இர்ஷாத்தின் வீட்டிற்குச் சென்றார்.

அதேநேரத்தில் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான், விவசாயிகள் தலைவர் நரேஷ் திகாயத் ஆகியோர் ஆசிரியை திரிப்தா தியாகியை சந்தித்தனர். தியாகி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் கிராமத்தில் சுமார் 70 சதவீதம் இந்து குடும்பங்கள் வசிக்கின்றன. தியாகி சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள் மட்டுமின்றி, இந்தப் பகுதியில் அதிக முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர்

கருத்துகள் இல்லை: