மாலை மலர் : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்த போது, ஏழைகளுக்காக தங்கும் விடுதி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் 39 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டன.
இதற்கு பாகிஸ்தான் நாணய மதிப்பில் 189.015 மில்லியன் ரூபாய் செலவானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் உணவு விநியோகம் செய்வதற்காக 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் உணவு மற்றும் வாகனங்களுக்கு என 2022 மார்ச் வரை 161.88 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது.
இந்நிலையில் இம்ரான் கான் பதவி விலகிய பிறகு, ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியில் முந்தைய அரசின் செலவுகள் குறித்து தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இம்ரான் கான் பிரதமராக இருந்த போது அவரது வீட்டில் இருந்து பிரதமர் அலுவலகம் வரை செல்வதற்கு மட்டும் 984 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆவணங்களின்படி, இம்ரான் கான் பயணத்திற்கு 472.36 மில்லியன் ரூபாயும், அதற்காக அவர் பயணித்த ஹெலிகாப்டரை பராமரிக்க 511.995 மில்லியன் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
போக்குவரத்து செலவையும் தாண்டி, 2018-19 ஆண்டு காலகட்டத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்திற்கு மட்டும் மின்சார கட்டணமாக 149.19 மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக