புதன், 15 பிப்ரவரி, 2023

ஏர் இந்தியா 470 புதிய விமானங்களை வாங்குகிறது ... ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுடன் மெகா ஒப்பந்தம்

மாலை மலர் :புதுடெல்லி: டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும்,
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது.
இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரத்தன் டாடா, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகரன், ஏர்பஸ் விமான நிறுவனத்தின் தயாரிப்பான, அகலம் அதிகமாக இருக்கக்கூடிய A350 ரக விமானங்கள் 40 வாங்க உள்ளதாகவும், அகலம் குறைவான 210 விமானங்கள் வாங்க உள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் டாடா நிறுவனம் நல்லுறவை கொண்டிருப்பதாகத் தெரிவித்த சந்திரசேகரன், 250 விமானங்கள் வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

இதேபோல் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள், 10 போயிங் 777-9s அகலமான விமானங்கள் மற்றும் 190 போயிங் 737MAX அகலம் குறைவான விமானங்கள் வாங்கப்படுகின்றன. விமான வர்த்தக வரலாற்றில் இது மிகப்பெரிய கொள்முதலாக கருதப்படுகிறது.
 

கருத்துகள் இல்லை: