வியாழன், 16 பிப்ரவரி, 2023

நெடுமாறன் தந்த நெருக்கடி- முறியடித்த ஸ்டாலின்

 மின்னம்பலம் - ஆரா : “பிப்ரவரி 13 ஆம் தேதி காலை தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மூத்த தமிழ் தேசிய வாதியான பழ.நெடுமாறன் பிரபாகரன் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  
அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது  அவருடன் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ஈழ  உணர்வாளரான வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்டோர் இருந்தனர்.
 ஆனால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் ஈழ ஆதரவு  அரசியல் தலைவர்களான வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றவர்கள் தன்னுடன் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் நெடுமாறன்.
கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலேயே  அவர்களுடன் பேசிவிட்டார்.


பிரபாகரன் தொடர்பான முக்கியமான தகவலை அறிவிக்க வேண்டிய தருணத்தில் நீங்கள் உடன் இருக்க வேண்டும் என்று பேசியுள்ளார் நெடுமாறன்.
இந்த நிலையில் நெடுமாறனின் அழைப்பை ஏற்ற வைகோ 12 ஆம் தேதி இரவு தஞ்சாவூர் சென்றுள்ளார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
அப்போது அவரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து வந்து கவிஞர் காசி ஆனந்தன் ஹோட்டலில் சந்தித்துப் பேசியுள்ளார்.
’பிரபாகரன் குடும்பத்தினர் நெடுமாறனைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவிக்கப் போகிறார் நெடுமாறன்.
அப்போது நீங்களும் உடன் இருக்க வேண்டும்’ என்று சொன்னதும் வைகோ அதிர்ந்து போயிருக்கிறார்.

உலகம் முழுதும் இருக்கும் ஈழ முன்னாள் போராளிகள் பலர் வைகோவுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். அப்போதே சிலருடன் பேசிய வைகோ தனக்கு இப்படிப்பட்ட தகவல் எதுவும் உறுதியாக வரவில்லை என்று தெரிவித்தார்.
அவரை காசி ஆனந்தன் சமாதானப்படுத்தி நாளை பத்திரிகையாளர் சந்திப்புக்கு நீங்கள் வரவேண்டும் என்று தெரிவித்துவிட்டு முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குத் திரும்பியுள்ளார்.

இதற்கிடையே திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றவர்களும் நெடுமாறனால் தஞ்சைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களில் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் தஞ்சைக்கு புறப்படவும் தயாராகிவிட்டனர்.
ஆனால்  அன்று மாலையே உளவுத்துறை மூலம் இத்தகவல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது.நாடாளுமன்ற உறுப்பினர்களான வைகோ, திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினரான வேல்முருகன்  ஆகியோர் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று நெடுமாறன் அறிவித்தால், கூட்டறிக்கை வெளியிட்டால் தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் அது ஆளும் கட்சியான திமுகவுக்கு சிக்கலாக இருக்கும், மேலும் திமுக கூட்டணியிலும் சலசலப்புகள் எழும், அரசுக்கும் சங்கடங்கள் ஏற்படலாம் என்று முதல்வர் கருதியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் அன்று மாலையே தஞ்சாவூரில் இருந்த வைகோவுடன்  தொலைபேசியில் பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் திருமாவளவன், வேல்முருகன் ஆகியோரோடும்  போனில் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.  இதற்குப் பிறகுதான் வைகோ மறுநாள் காலை  நெடுமாறனை சந்திக்காமலேயே  தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டுவிட்டார். முதலமைச்சரின் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு திருமாவளவனும், வேல்முருகனும் தஞ்சாவூருக்கு செல்லவில்லை.

திமுக தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, ‘கலைஞர் காலத்தில் இருந்தே நெடுமாறன் திமுகவுக்கு எதிராக குறிப்பாக கலைஞருக்கு எதிராக செயல்படுவதில் முனைப்பானவர்.  
அதன் தொடர்ச்சியாக இப்போதும் நெடுமாறன் மூலம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறி இதைவைத்து தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை உண்டாக்கவும், பாதுகாப்பு தொடர்பான சர்ச்சைகளில் திமுக அரசை சிக்கவைக்கவும் திட்டமிட்டிருந்தார்கள் சிலர்.

இது தொடர்பான நிகழ்வில் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் போன்ற திமுக கூட்டணிக் கட்சியினரும் பங்கேற்றிருந்தால் திமுகவுக்கும் திமுக அரசுக்கும் அது சிக்கலை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான் அதை முறியடித்திருக்கிறார் ஸ்டாலின்.

நெடுமாறனை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் ஸ்டாலின். 2021 இல் முதன் முறையாக தான் முதலமைச்சரானதும் பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற ஸ்டாலின், அதில் நெடுமாறனை கவனமாக தவிர்த்துவிட்டார்.
இந்த நிலையில்தான் பாஜகவின் ஸ்கெட்ச்சின் படியே தற்போது பழ. நெடுமாறன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான ஆதரவுக் கட்டமைப்பை உண்டாக்கி தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த  திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் திமுக கூட்டணிக் கட்சியினரையும் தந்திரமாக ஈடுபடுத்தும் முயற்சியை முறியடித்திருக்கிறார் ஸ்டாலின்’ என்கிறார்கள் திமுக தரப்பில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: