minnambalam.com - christopher : சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக்டோபர் 19) தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததைக் கண்டித்து, இன்று ஒருநாள் வள்ளுவர் கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப் போவதாக கட்சித் தலைமை அறிவித்தது..
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். எனினும் இன்று காலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் அதிமுக தொண்டர்கள் திரண்டனர். அதனால் அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
தடையை மீறி போராட்டம்!
இந்நிலையில் காலை 9 மணிக்கு கருப்பு சட்டை அணிந்து அங்கு வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இதற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களை கைது செய்த போலீசார், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்தில் ஏற்றி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுகணக்கான அதிமுக தொண்டர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதிமுகவினர் விடுதலை!
இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் அடைக்கப்பட்ட இபிஎஸ், அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட இபிஎஸ், முன்னாள் அமைச்ச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் உட்பட750 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக