Thiagarajah Wijayendran : புக்கர் மேடையில் ஒலித்த தமிழ்!
உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான `புக்கர்` விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான் கருணாதிலக இம்முறை இந்த விருதுக்குத் தெரிவாகியிருந்தார். அவரது உரையின் இறுதி வரிகளில் "இலங்கை சொந்தங்களே, நாம் எமது கதைகளைக் கூறுவோம். கூறிக்கொண்டே இருப்போம்" எனத் தமிழிற் கூறி முடித்தார். அதற்கு முன்னர் சிங்களத்திற் சில வரிகளை அவர் தனது உரையிற் சேர்த்திருந்தார். அவரது நன்றியுரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது.
நோபற் பரிசுக்கு அடுத்ததாக உயர்ந்த இலக்கிய விருது எனக் கணிக்கப்படும் புக்கர் பரிசு பெறும் முதலாவது இலங்கையர் ஷெஹான் கருணாதிலக. இலங்கையிற் பிறந்த மைக்கேல் ஒண்டாச்சி முப்பது வருடங்களுக்கு முன்னர் இவ்விருதை வென்றிருந்தாராயினும் அவர் கனடியப் பிரசையாகவே கணிக்கப்படுகிறார்.
`செவன் மூன்ஸ் ஓப் மாலி அல்மாயிடா ` என்ற நாவலுக்காக ஷெஹான் வென்ற விருது, 50000 பிரிட்டிஷ் பவுண்களைக் கொண்டது. 1969முதல் இப்பரிசு ஒரு சிறந்த படைப்புக்கு (நாவல்/ சிறுகதை ) வழங்கப்பட்டு வருகிறது. அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி போன்றோரும் இவ்விருதை வென்றவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள்.
பிறப்பாற் சிங்களவராய் இருந்தபோதிலும் உலகின் மிகப்பெரிய விருதொன்றை வென்ற மேடையில், இலங்கையின் இரு மொழிகளிலும் உரையாற்றியதன் மூலம் ஷெஹான் பல செய்திகளைப் பலருக்குச் சொல்லியிருக்கிறார். புரிந்தவர்களுக்குப் புரியவேண்டிய செய்தி புரிந்திருக்கும்.
வாழ்த்து ஷெஹான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக