திங்கள், 17 அக்டோபர், 2022

காவிகளுடன் கூட்டணி அமைத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!

vinavu.com  : சமீபத்தில் தி வயர் இணையதளம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி இது!
‘Superhumans of Cringetopia’ (@cringearchivist) என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் அரசியல் நையாண்டி செய்யும் பக்கமாகும். அப்பக்கத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிலையை ஒருவர் வழிபடுவது போன்றதொரு பதிவு வெளியானது. அந்தப் பதிவை உடனடியாக ‘ஆபாசமானது’ (nudity and sexual content) என்று வரையறுத்து இன்ஸ்டாகிராம் நீக்கியது.‌
ஆனால் அந்தப் பதிவை ஆபாசம் என்று சித்தரிக்க அதில் எதுவுமே இல்லை.
யோகி சிலையும்சரி அதை வழிபட்டவரும்சரி ஆடையுடனேயே காட்சியளித்தனர்.
Algorithm-ல் பிழை ஏற்பட்டு தவறுதலாக அந்தப் பதிவு நீக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் உரிமையாளர் ஆரம்பத்தில் நினைத்தார்.
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெடாவில் (META) பணிபுரியும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தி வயர் நிறுவனத்திற்குக் கிடைத்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
அந்தப் பதிவு நீக்கப்பட்டதற்கான காரணம் algorithm-ல் ஏற்பட்ட கோளாறு அல்ல. பா.ஜ.க-வின் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (IT cell) தலைவரான அமித் மாளவியா (Amit Malviya) என்பவர் அந்தப் பதிவை ரிப்போர்ட் (report) செய்ததே அதற்குக் காரணம். அவர் ரிப்போர்ட் செய்ததுமே அந்தப் பதிவு இன்ஸ்டாகிராமால் சரி கூட பார்க்கப்படாமல் உடனடியாக நீக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அமித் மாளவியாவால் 705 இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன.  அவை அனைத்தையுமே இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் @cringearchivist பக்கத்திலிருந்து 7 பதிவுகள் நீக்கப்பட்டிருந்தன. அந்த ஏழுமே மாளவியாவால் ரிப்போர்ட் செய்யப்பட்ட பதிவுகளாகும்.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெடா (META) ‘XCheck’ அல்லது ‘Cross Check’ என்றொரு திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டம் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களுக்கான சிறப்புத் திட்டமாகும். மெடாவின் இந்த ரகசியத் திட்டம் செப்டம்பர் 2021-இல் Wall Street Journal-ஆல் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரே வெளி உலகிற்குத் தெரிய வந்தது.

இந்த திட்டம் மெடா நிறுவனத்திற்கு உள்ளிருந்த சிலராலேயே விமர்சிக்கப்பட்டது. இதன் கீழ் ஒயிட் லிஸ்ட் (Whitelist) செய்யப்பட்டவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டன. கோடிக்கணக்கான followers-ஐ கொண்ட பிரேசில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் whitelist-ல் சேர்க்கப்பட்டார். ஆனால், இன்ஸ்டாகிராமில் வெறும் 5,000-க்கும் குறைவான மற்றும் ஃபேஸ்புக்கில் 15,000-க்கும் குறைவான followers-ஐ‌ கொண்ட மாளவியாவின் பெயரும் இந்த சிறப்பந்தஸ்து பட்டியலில் உள்ளது. அமித் மாளவியா பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவருக்கு இந்த XCheck account என்ற சலுகை கிடைத்துள்ளது.

இதை பா.ஜ.க, எப்படி எதிர்ப்புக் குரல்களை நசுக்குவதற்கு பயன்படுத்தி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் பொய் பிரச்சாரங்களில் ஈடுபடுவது, பாசிசத்தை எதிர்த்துப் பேசுபவர்களின் குரல்களை முடக்குவது என்பதையே கொள்கையாகக் கொண்டு, இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி கும்பல் இயங்கி வருகிறது. இவர்களுக்கு துணைபுரியும் வேலையை ஃபேஸ்புக் (மெடா) நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. காவிகளும் கார்ப்பரேட்டுகளும் இவ்வாறு தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு ஒருவர் நலனை மற்றவர் பாதுகாக்கும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர்.
பொம்மி
செய்தி ஆதாரம் : தி வயர்

கருத்துகள் இல்லை: