tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஎஸ்பி லிங்கத் திருமாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டசபையில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அதில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி உள்ளிட்ட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அப்போதைய டிஎஸ்பி லிங்கத் திருமாறனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 4 போலீசார், 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அருணா ஜெகதீசன் ரிப்போர்ட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா கெஜதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018 ஜூன் மாதம் 4ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்தது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
திட்டமிட்ட படுகொலை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, மக்கள் தப்பி ஓடும்போதும் அவர்களை போலீசார் குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டது என்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
துப்பாக்கிச்சூடு குறித்து முன் எச்சரிக்கை கொடுக்கப்படவில்லை என்பதும், சுடப்பட்டவர்களில் ஒருவர் கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதி செய்வதாகவும் ஆணையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. போலீசார் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர் என்றும், 17 காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது ஆணையம். முதல்வர் ஸ்டாலினும், உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையிலேயே தெரிவித்திருந்தார்.
அந்த 17 பேர்
தென்மண்டல ஐ.ஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்.பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்கத் திருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன் பார்த்திபன், துணை ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரென்னெஸ், முதல் நிலை காவலர்கள் சங்கர், சுடலைக்கண்ணு, சதீஷ்குமார், கண்ணன், தலைமை காவலர் ராஜா, இரண்டாம் நிலை காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, காவலர் மதிவாணன் ஆகியோர் தான் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ள 17 பேர் ஆவர்.
போலீசார் சஸ்பெண்ட்
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 காவல் ஆய்வாளர் திருமலை, சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டின்போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திருமலை தற்போது திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருமலையை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்
அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
டிஎஸ்பி சஸ்பெண்ட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டிஎஸ்பி லிங்கத் திருமாறன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் பல உயரதிகாரிகள் மீதும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக