வியாழன், 22 ஆகஸ்ட், 2019

ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்? ... தன் மகளையே கொன்றவர் ...

indrani peterindirani mukherjeenakkheeran.in - ஆதனூர் சோழன் : ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாகக் கூறித்தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்திய தொலைக்காட்சிகளில் புகழ்பெற்றவரான பீட்டர் முகர்ஜியும் அவருடைய இரண்டாவது மனைவியான இந்திராணி முகர்ஜியும் இணைந்து உருவாக்கியதே ஐஎன்எக்ஸ் மீடியா. இந்த மீடியா தனது பங்குகளை விற்பதற்கும், சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியை பெறுவதற்கும் ப.சிதம்பரம் உதவியதாகத்தான் சிபிஐ மூலம் பாஜக அரசு குற்றம்சாட்டுகிறது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 2018 ஜூன் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்கிறார். அந்த மனு மீதான விசாரணை 2019 ஜனவரி 25 ஆம் தேதி முடிகிறது. ஆனால், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கவுர் அறிவிக்கிறார். இதற்கிடையே பாஜக பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 2019 ஜூலை மாதம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவராக அதாவது அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புதல் அளிக்கிறார். அவர் இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா? மகளை கொலை செய்த வழக்கில் கணவர் பீட்டர் முகர்ஜியுடன் சிறையில் இருக்கிறார் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஒருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புக்கொண்டவுடன், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறார் கவுர். அதாவது, ஒரு முன் ஜாமீன் வழக்கில் சுமார் ஒரு ஆண்டு கழித்து தீர்ப்பு வெளிவருகிறது.
சரி, இப்போ இந்திராணி முகர்ஜி விவகாரத்துக்கு வருவோம். அவருடைய கதையைக் கேட்டால் மூக்கைப் பொத்திக்கிற மாதிரி இருக்கு.
1972 ஆம் ஆண்டு அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் உபேந்திரகுமார் போராவுக்கும் துர்கா ராணிக்கும் பிறந்தவர் இந்திராணி. இவருக்கு பொறி போரா என்றுதான் பெயர் வைத்தார்கள். பிறகுதான் பெயரை மாற்றியிருக்கிறார்.


10 ஆம் வகுப்பு படிக்கும்போது கவுகாத்தியில் உள்ளூர் பூசாரி ஒருவருடன் சில காலம் காணாமல் போனாராம். பிறகு தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தார்கள். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது, 1987 ஆம் ஆண்டு விண்ணுப் பிராசத் சவுதரி என்பவரை காதலித்தாராம். சுமார் நான்கு மாதங்கள் இந்திராணியுடன் உறவில் இருந்ததாக விண்ணுப் பிரசாத்தே கூறியிருக்கிறார்.
12 ஆம் வகுப்பு முடித்து ஷில்லாங்கில் உள்ள லேடி கேண் காலேஜில் சேர்ந்தார் இந்திராணி. காலேஜில் படிக்கும்போதே 1988ல் சித்தார்த்தா தாஸ் என்பவருடன் லிவிங் டுகெதெர் என்ற அடிப்படையில் திருமணம் செய்யாமலே குடித்தனம் செய்திருக்கிறார். இருவருக்கும் 1989 பிப்ரவரி 11ல்  சீனா போரா என்ற மகளும், 1990ல் மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்திருக்கிறார்கள். மகன் பிறந்த ஆண்டே காதலனைப் பிரிந்து, கவுகாத்திக்கு வந்த இந்திராணி, தனது பிள்ளைகள் இருவரையும் பெற்றோருக்கே தத்துக்கொடுத்தார்.
அடுத்து கொல்கத்தாவில் தங்கி கணிணி வகுப்புகளுக்கு சென்றார். அங்கு சஞ்சீவ் கண்ணா என்ற தொழில் அதிபரை வளைத்துப் போட்டிருக்கிறார். இருவரும் 1993 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 1997ல் விதி கண்ணா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பத்தோடு மும்பைக்கு மாறினார்கள்.
2002 ஆம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை சந்தித்தார் இந்திராணி. அவரைச் சந்தித்த வேகத்தில் சஞ்சீவ் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு பீட்டரை திருமணம் செய்தார். அதைத்தொடர்ந்து மகள் விதி கண்ணாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பீட்டரும் விதி கண்ணாவை சட்டப்படி தனது மகளாக தத்தெடுத்தார்.
sheena boraஇந்நிலையில்தான் பெரியவர்களா வளர்ந்துவிட்ட தனது முதல் பிள்ளைகளான சீனா போரா, மைக்கேல் போரா ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் இந்திராணி. தனது பிள்ளைகளையே சகோதரி என்றும் சகோதரன் என்றும் பீட்டரிடம் அறிமுகப்படுத்தினார். சீனா போராவை 2006 ஆம் ஆண்டு மும்பைக்கு அழைத்து வந்த இந்திராணி, கல்லூரி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்தார். பீட்டருடன் இணைந்து 2007 ஆம் ஆண்டுதான் ஐஎன்எக்ஸ் மீடியாவை தொடங்கினார். அதன்பிறகு பீட்டரும், இந்திராணியும் மும்பை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல், ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா ஆகிய நகரங்களில் மாறிமாறி வாழ்க்கையை நடத்தினர். இந்நிலையில்தான் 2012 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு சீனா போரா காணாமல் போனார்.
இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மும்பை போலீஸார் இந்திராணி முகர்ஜியை கைது செய்தனர். தனது மகளான சீனா போராவையே தங்கை என்று கூறியதும், அவளை கொலை செய்திருப்பது நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பீட்டரும் சிறையில் இருக்கிறார்.



இப்பேர்பட்ட நேர்மையான பெண்மணியான இந்திராணி முகர்ஜிதான் இப்போது ப.சிதம்பரத்துக்கு எதிராக அரசுச் சாட்சியாக மாற ஒப்புக்கொண்டிருக்கிறார்

கருத்துகள் இல்லை: