மின்னம்பலம் :
முன்னாள்
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் தொடர்பான மனுவை நீதிபதி
ரமணா விசாரிக்க மறுத்து, தலைமை நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரைத்த
நிலையில், ப.சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அமலாக்கத் துறை
லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம் அந்த தடையை நீட்டித்தும் வந்தது. ஆனால் நேற்று (ஆகஸ்ட் 20) அதிரடியாக முன் ஜாமீன் வழங்க மறுப்புத் தெரிவித்துவிட்டது. இதனால் சிதம்பரத்தைக் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தீவிரம் காட்டி வருகிறது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் ப.சிதம்பரம் வீட்டுக்கு விரைந்த சிபிஐ 2 மணி நேரத்தில் ஆஜராக வேண்டும் என்று அவரது வீட்டுச் சுவரில் சம்மன் ஒட்டிவிட்டுச் சென்றது.
இதற்கிடையே சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞர் கபில் சிபல், டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காலை 10.30 மணிக்கு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிதம்பரம் தரப்பில், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கேள்விகளுக்கு எல்லா நேரங்களிலும் பதில் அளிக்கப்பட்டது. இதுவரை 8 முறை நேரடியாகச் சென்று விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது என்று வாதிடப்பட்டது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், சல்மான் குர்ஷித், விவேக் தன்கா ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். எனினும் நீதிபதி ரமணா இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்க மறுத்து இவ்வழக்கைத் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார். நீதிபதி ரமணா பரிந்துரைத்த சிறிது நேரத்திலேயே மீண்டும் சிபிஐ ப.சிதம்பரம் வீட்டுக்குச் சென்றுள்ளது.
இதற்கிடையே கபில் சிபல், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் முறையீடு செய்த நிலையில், அயோத்தி வழக்கு நடைபெற்று வருவதால், பிற்பகல் 1 மணிக்கு முறையிடலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து எங்களுக்குத் தெரிவிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் இந்த பரபரப்பான சூழலில் அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக