மாலைமலர் : கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு 7 வயது மகனுடன் விசைத்தறி அதிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மகனுடன் தீக்குளிக்க முயன்ற விசைத்தறி அதிபர்
கோவையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி அதிபர் குமார்
கோவை:
கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 44). விசைத்தறி அதிபர். இவரது மகன் ரித்தீஸ்குமார் (7). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை குமார் தனது மகனுடன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வந்தார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணையை எடுத்து தன் மீதும் மகன் மீதும் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று குமாரின் கையில் இருந்த தீப்பெட்டியை பிடுங்கி எரிந்தனர்.பின்னர் குமாரையும், ரித்தீஸ்குமாரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து தீக்குளித்து தற்கொலை முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது குமார் போலீசாரிடம் கூறியதாவது:- நான் கடந்த 2015-ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி மோன்ராஜ் என்பவருக்கு ரூ. 10 லட்சம் கடன் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து 2 வருடங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். மகன் ரித்தீஸ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்ராஜை சந்தித்து பணத்தை கேட்ட போது அவர் என் மீது கந்து வட்டி புகார் கொடுத்து விடுவதாக என்னை மிரட்டினார்.
நான் இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த போது அவர்களும் தற்போது உள்ள சூழ்நிலையில் அவர் சொல்லுவதுதான் நியாயமாகும் எனவே நீயே அவரிடம் சென்று பேசி பணத்தை வாங்கி கொள் என்று கூறிவிட்டனர். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு மகனுடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். தொடர்ந்து குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக