சனி, 28 அக்டோபர், 2017

ஜெயலலிதா மரணம் குறித்து 30-ந் தேதி முதல் நீதி விசாரணை

thinathanthi : சென்னை, தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு (2016) டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் பலன் இன்றி அவர் உயிர் இழந்தார். ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டபோது, அதில் ஒரு அணிக்கு தலைமை தாங்கிய ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்தார். பின்னர், அ.தி.மு.க. இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கியபோதும் ஓ.பன்னீர்செல்வம் அதே கோரிக்கையை மீண்டும் முன்வைத்து வலியுறுத்தி வந்தார். அதை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து செப்டம்பர் 25-ந்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.


விசாரணை கமிஷன் இயங்குவதற்காக சென்னை எழிலகத்தில் கலச மகால் முதல் மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கிடையே, விசாரணை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த 25-ந்தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கலச மகால் கட்டிடத்தில் விசாரணை நடத்துவதற்கான அறை அமைக்கும் பணி நிறைவடையாததால், விசாரணை தொடங்குவது தள்ளிப் போனது. இந்த நிலையில், விசாரணை அறை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்ததால், அறையை பார்வையிடுவதற்காக நேற்று காலை 10.15 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கலச மகாலுக்கு வந்தார். அறையை பார்வையிட்ட அவர், அங்கு நாற்காலி, மேஜை எதுவும் போடாமல் இருந்ததை பார்த்து, அவருடைய அறைக்கு கீழ் தளத்தில் உள்ள தென்மண்டலத்துக்கான தேசிய பசுமை தீர்ப்பாயம் பதிவாளர் அறையில் வந்து உட்கார்ந்து இருந்தார். பின்னர், அவருடைய அறைக்கு நாற்காலி, மேஜையை ஊழியர்கள் கொண்டுவந்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து காலை 10.45 மணிக்கு நீதிபதி ஆறுமுகசாமி தன்னுடைய புதிய அலுவலக அறைக்கு சென்று, விசாரணையை தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார். 22.9.2016 அன்று காலஞ்சென்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற் கான சூழ்நிலைகள் மற்றும் நிலைமை குறித்தும், அவர் துரதிருஷ்டவசமாக இறந்த நாளான 5.12.2016 வரை அவருக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்தும் விசாரணை செய்தல்.

மேற்சொன்ன பொருண்மை குறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடி தொடர்பு உடையவர்களும் அதுகுறித்து அவர்களுக்கு தெரிந்த தகவலை சத்திய பிரமாண உறுதிமொழி பத்திரபடிவில் (1+2 நகல்களுடன்) தகுந்த ஆவணங்களுடன் நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், முதல் தளம், கலச மகால் புராதன கட்டிடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை- 600005 என்ற முகவரியில் அமைந்துள்ள விசாரணை ஆணையத்திடம், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: