புதன், 27 செப்டம்பர், 2017

ஜெ. சிகிச்சை அறையில் சிசிடிவி இல்லை: அப்பல்லோ நிர்வாகம்!


ஜெ. சிகிச்சை அறையில் சிசிடிவி இல்லை: அப்பல்லோ நிர்வாகம்!மின்னம்பலம் :ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி காமிராக்கள் இல்லை என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து சமீபத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஜெயலலிதாவைப் பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டார் என்றும் நாங்கள் பொய் சொன்னோம்” என்று கூறியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஜெயலலிதா மரணத்திற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய தினகரன், தங்களிடம் சிசிடிவி காட்சிகள் இல்லை என்றும், ஆனால் சசிகலாவால் எடுக்கப்பட்ட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகள் உள்ளன என்றும் தெரிவித்திருந்தார். இது ஒருபுறமிருக்க ஜெயலலிதாவை நான் பார்த்தேன் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து, ஜெயலலிதா மர்ம மரணத்தை விசாரிக்கும் விசாரணை ஆணையராக நீதிபதி ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவப் பணிகள் தலைவர் ஹரிபிரசாத்,"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மைதான். ஆனால் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பது விசாரணை கமிஷனில் தெரிவிக்கப்படும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அறையில் சிசிடிவி காமிராக்கள் எதுவும் கிடையாது. ஆனால் மருத்துவமனை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளன.
இடைத் தேர்தலில் ஜெயலலிதா கைரேகை வைத்த விபரங்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். எங்கள் தரப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதற்கு விளக்கம் அளிக்க முடியாது. நீதிபதி ஆறுமுகசாமி கேட்டால் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்யத் தயாராக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, “ஜெயலலிதா மரணத்தின் மீதான அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க அப்பல்லோ நிர்வாகம் தயாராக உள்ளது. ஜெயலலிதாவுக்கு 100 சதவிகிதம் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் விசாரணை ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஒப்படைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: