புதன், 27 செப்டம்பர், 2017

2 அமைச்சர்களின் அறிவிப்பு : சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம்


சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் பார்த்தோம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் அறிவித்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 27, 2017, 06:00 AM சென்னை, ஜெயலலிதா உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தது வரையில் நடந்தது என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே நேரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட நாள் தொடங்கி, அவர் மரணம் அடைந்த டிசம்பர் 5-ந் தேதி வரையில் டாக்டர்கள் தவிர யாரும் அவரை நேரடியாக பார்க்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதனால் டாக்டர்கள் தவிர்த்து வேறு யாரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்களா, பார்க்க அனுமதி அளிக்கப்பட்டதா என்பது குறித்த மர்ம முடிச்சு அவிழாமல் இருந்து வருகிறது. இதனால் ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றியும், மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.


இதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்ததால், இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அ.தி.மு.க. 2 அணிகளாக பிளவுபட்டபோது, ஓ.பன்னீர்செல்வம், இணைப்புக்கு இதை ஒரு நிபந்தனையாக வைத்தார். அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 17-ந் தேதி, சென்னை கோட்டையில் நிருபர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது அவர், “பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்தும் ஜெயலலிதாவின் இறப்பு குறித்த பல்வேறு செய்திகள் ஊடகங் களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக, சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நேற்று முன்தினம் தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்த்ததாக கூறி உள்ளனர். சென்னையில் நேற்று கீழ்ப்பாக்கம் கூட்டுறவு பதிவாளர் சங்க அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, அந்த துறைக்கான அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நீங்கள் நேரடியாக அவரை பார்த்தீர் களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “நான் உள்பட எல்லா அமைச்சர்களும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம்” என பதில் அளித்தார். இதே போன்று

டெல்லியில் நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற பின்னர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை பார்த்தது குறித்து அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துகளை கூறி வருகிறார்களே, நீங்கள் அவரை பார்த்தீர்களா, இல்லையா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிலோபர் கபில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, நாங்கள் (அமைச்சர்கள்) தினமும் அங்கு செல்வோம். ஒரு முறை அவரை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றும்போது நான் அவரை பார்த்தேன். அப்போது என்னுடன் சில அமைச்சர்கள் இருந்தனர். மற்ற அமைச்சர்கள் சொல்வது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறினார். அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதாவை பார்த்தோம் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், நிலோபர் கபிலும் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினத்தந்தி

கருத்துகள் இல்லை: