புதன், 26 ஜூலை, 2017

ஜெர்மனியில் பெரியார் மாநாடு!


ஜெர்மனியில் பெரியார் மாநாடு!மின்னம்பலம் : தந்தை பெரியாரின் கொள்கைகளைப் புவிப்பந்து முழுவதும் பரப்பும்விதமாக உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது ‘பெரியார் பன்னாட்டு மையம்’ என்ற அமைப்பு.
இந்த அமைப்பின் சார்பில் சுயமரியாதை இயக்கத்தின் 91ஆவது ஆண்டு விழா ஜெர்மனி நாட்டில் வரும் ஜூலை 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் தமிழகத்தில் இருந்து ஐம்பது பேர் இம்மாநாட்டுக்காக ஜெர்மனி புறப்பட்டுச் செல்கின்றனர்.
பெரியார் பன்னாட்டு மையத்தின் கிளைகளுக்கு ‘சாப்டர்’ என்று பெயர். அமெரிக்கா சாப்டர், ஜெர்மனி சாப்டர் சார்பாக இந்த விழா நடைபெறுகிறது.
ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இவ்விழாவில் சர்வதேச அறிஞர் பெருமக்கள், பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

முதல் நாள் நிகழ்வில், கொலோன் பல்கலைக்கழக வளாகத்தில் மாலை 4.30 மணியளவில் பெரியார் பன்னாட்டு மையத்தின் ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்புரையாற்றுகிறார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தரும் திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி தலைமையில் நடக்கும் விழாவில், பிரிட்டன் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் தொடக்க உரையாற்றுகிறார்.

தந்தை பெரியார் எழுதிய ‘கடவுளும் மனிதனும்’ என்ற நூலை ஜெர்மனியில் Gott And Mensch என்ற தலைப்பில் பேராசிரியர் கிளாடியா வெப்பர் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலும், பெரியார் ஈ.வே.ரா. வாழ்க்கைச் சுருக்கம் என்ற தலைப்பில் ஸ்வென் வொர்ட்மேன் எழுதிய ஜெர்மன் மொழியாக்க நூலும் மேலும் சில நூல்களும் முதல் நாளில் வெளியிடப்படுகின்றன.
அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மையத்தின் தலைவரான சிகாகோவைச் சேர்ந்த டாக்டர் சோம.இளங்கோவன், அமெரிக்கா - மேரிலேண்ட் டாக்டர் சித்தானந்தம் சதாசிவம் ஆகியோர் உரைகளைத் தொடர்ந்து, கி.வீரமணி முதல் நாள் நிகழ்ச்சியின் சிறப்புரையாற்றுகிறார். முதல் நாள் மாலை பெரியார் திரைப்படமும் ஜெர்மனியில் திரையிடப்படுகிறது.
அடுத்த இரண்டு நாள்களிலும் தமிழக, இந்திய, சர்வதேச பகுத்தறிவாளர்கள் கலந்துகொள்ளும் பெரியாரிய கொள்கை குறித்த கருத்தரங்கங்கள், ஆய்வரங்கங்கள், திறனாய்வு அமர்வுகள் ஆகியவை நடைபெறுகின்றன.
“பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகள் சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி விவாதிப்பதோடு, இம்மாநாட்டில் உலக அளவிலான பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் ஆகியவை பற்றியும் அலசி ஆராயப்படும்” என்கிறார்கள் பெரியார் பன்னாட்டு மைய அமைப்பினர்.

கருத்துகள் இல்லை: