செவ்வாய், 25 ஜூலை, 2017

விவசாயம்... இன்சூரன்ஸ் கம்பெனிகளின் லாபம் ரூ 10000 கோடிகள்

visil.in:   மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொள்கின்றது. ஆனால் இந்த பயிர் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயிகளுக்கு எந்தப்பலனையும் அளிக்க வில்லை. மாறாக பயிர் இன்சூரன்ஸ் கம்பெனிகள் கடந்த 2016 காரிப் பருவத்தில் சூன் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ 10000/ கோடிகள் லாபம் ஈட்டி உள்ளன.
பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்ககிற்கும் குறைவான இழப்பீடு கோரிக்கைகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலிற்கான மய்யம் என் கின்ற அரசு சாரா அமைப்பின் அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தேசிய விவசாய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மோடி ஆட்சியில் இந்திப் பற்றுடன் இந்த திட்டம் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்று பெயர் மாற்றும் செய்து விவசாயிகளின் மத்தியில் பெரிதும் விளம்பரம் செய்யப்பட்டது.

மத்திய மாநில அரசுகள் பெருமளவு இந்தத் திட்டத்திற்கு நிதி யுதவி செய்கின்றன. ஆனால் இதில் மாநில அரசுகளின் நிதியுதவியில் ஏகப்பட்ட முரண்பாடுகள் காணப்படுவதாக  சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலிற்கான மய்யம் என் கின்ற அரசு சாரா அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
விவசாயம் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் தரவுகளின் படி ஏப்ரல் 2017 வரை பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் 32.45 % கோரிக்கைகளை தான் ஏற்றுக் கொண்டுள்ளன. விவசாயிகளின் கோரிக்கை ரூ 6000/- கோடிகள். பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிய காப்பீட்டு தொகை ரூ 2000/- கோடிகள். இதில் அதிர வைக்கும் அம்சம் என்னவென்றால் காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையத்தின் தரவுகளின் படி ரூ 15,981 கோடியை காப்பீட்டுக்  கட்டணமாக காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகளிடம் வசூல் செய்துள்ளன.
ஆனால் இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் துணை மேலாளர் அஜய் சிங்கால் இந்த வேறுபாடு இன்னும் அதிகப்படியான விவசாயிகள் காப்பீட்டில் இணைக்கப்பட்டால் மறைந்து விடும் என் கின்றார். இது விவசாயிகளிடம் அதிக பிரிமியம் வசூல் செய்ததற்கு  ஒரு ஒப்புதல் வாக்குமூலம் தான். இன்னும் அதிக விவசாயிகள் காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு பணமழை தான்.
சுமார் 4 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
மூத்த காங்கிரஸ் தலைவர் கமல் நாத் இந்தத் திட்டத்தில் பெரிய நிறுவனங்களுக்கு கூரையை பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியுள்ளது என்று தெரிவித்தார். விதிமுறைகளும் நடை முறைகளும் செயல் முறைகளும் சிக்கலாக இருப்பதால் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் அதிக லாபமடைந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.  தினசரி 35 விவசாயிகளின் தற்கொலையை நாடு வெட்கமின்றி கடந்து செல்வதாக அவர் குறிப்பிட்டார்.   மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஹண்ணன் மொள்ளா கடந்த வருடத்தினை விட காப்பீட்டுச்  சந்தா 400% உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


இதில் வேடிக்கை என்னவென்றால் சுமார் 16000 கோடி ரூபாய்களை காப்பீட்டுக்கட்டணமாக வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள் ரூ 2000 கோடிகள் மட்டும் வழங்கிவிட்டு  ரூ 4000 கோடிக்கான இழப்பீட்டுக் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது தான். மோடி அரசின் திட்டங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றன. அதில் பயிர் காப்பீட்டுத் திட்டமும் ஒன்று. விவசாயிகளைக் காப்பாற்ற கொண்டு வரப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டம் பெரிய காப்பீட்டு நிறுவனங்களின் அமுத சுரபியாக மாறிவிட்டது.
ICICI-Lombard General Insurance, HDFC-ERGO General Insurance, IFFCO-Tokio General Insurance, Reliance General Insurance உள்ளிட்ட 8 தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு தொகையில் 97 % தை சுரண்டியுள்ளதாக ஹண்ணன் மொள்ளா குறிப்பிடுகின்றார். இப்படித் தான் பயிர்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட மோடி அரசு விரும்பினால் யார் தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை: