திங்கள், 10 ஆகஸ்ட், 2015

ரக்பி வீரர் தாஜுதீனின்' சடலம் தோண்டியெடுப்பு! கொலைக்கு மஹிந்தவின் மகன் யோஷிதவே காரணம் எனக் குற்றச்சாட்டு!

இலங்கையில் மூன்று வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் இன்று விசாரணைக்காக தோண்டியெடுக்கப்பட்டது. தாஜுதீன் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது தெஹிவளை ஜும்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டிருந்த தாஜூதீனின் சடலம், கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவுக்கமையவே தோண்டியெடுக்கப்பட்டது.
அவரது சகோதரர்கள் அங்கு வந்து சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
வசீம் தாஜூதீனின் சடலம் பொலித்தீன் உறையொன்றில் வைத்து புதைக்கப்பட்டிருந்தமையினால், அதனை தோண்டியெடுப்பதற்கு இலகுவாக இருந்ததாக அங்கு சென்ற கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரி பிரதீப் தென்னக்கோன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


கொலைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவே காரணம் எனக் குற்றச்சாட்டு
கடந்த 2012ஆம் ஆண்டு நாராஹென்பிட்டி பார்க் வீதியில் தாஜூதீன் தனது வாகனத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் விபத்தில் உயிரிழந்தார் என பொலிஸார் அப்போது நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தனர்.
ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து தாஜுதீன் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார் என பொலிஸார் நீதிமன்றத்திற்கு தற்போது அறிவித்துள்ளர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தாஜூதீனின் சடலம் மூன்று வருடங்களுக்கு பின்னர் தோண்டியெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை: