செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உத்தேச வரைபடம் அம்பலம்

லண்டன்: அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்திய துணைக் கண்டம் உட்பட, உலகின் பெரும்பகுதியை கைப்பற்ற திட்டமிட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, அதற்கான வரைபடத்தை தயாரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பி.பி.சி., செய்தியாளர் ஆண்ட்ரூ ஹோஸ்கின், 'எம்பயர் ஆப் பியர்: இன்சைடு தி இஸ்லாமிக் ஸ்டேட்' என்ற நுாலை எழுதியுள்ளார். அதில், ஐ.எஸ்., கைப்பற்ற திட்டமிட்டுள்ள நாடுகளும், அவற்றுள் நுழையும் வழிகளைக் கூறும் வரைபடங்களையும் இணைத்துள்ளார்.


அந்த நுாலில் கூறப்பட்டுள்ளதாவது: அபு முசாப் அல் - ஜர்கவி, பரந்துபட்ட இஸ்லாமிய தேசத்திற்காக உருவாக்கிய பயங்கரவாத அமைப்பு தான், 1996ல், ஐ.எஸ்., அமைப்பாக மாறியது. அப்போதே, 2020ல், உலக நாடுகளை, இஸ்லாமிய தேசம் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான, ஏழு அம்ச திட்டம் உருவாக்கப்பட்டது.கிழக்கே சீனா முதல், மேற்கே ஸ்பெயின் வரையிலான பகுதிகள், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகள், இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி ஆகியவற்றை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் கைப்பற்ற, ஐ.எஸ்., திட்டமிட்டுள்ளது.

எட்டு முதல், 15ம் நுாற்றாண்டு வரை, ஸ்பெயின், போர்ச்சுக்கல் மற்றும் பிரான்சை, மூர் வம்சத்தினர் ஆண்டனர். இதை குறிக்க, இஸ்லாமிய தேசத்தின் கீழ் கொண்டு வரவுள்ள அந்நாடுகளுக்கு, 'அன்டாலஸ்' என்ற அரபு பெயரை, ஐ.எஸ்., சூட்டியுள்ளது. இந்திய துணைக் கண்டத்திற்கு, 'குராசன்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஐ.எஸ்., அமைப்பில், 50 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்; 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, ஐ.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ளதால், அந்த அமைப்பிடம் பணம் கொழிக்கிறது.இந்த பயங்கரமான அமைப்பை, 2010 - 11ல் வேரோடு அழிக்கும் சூழல் உருவானது. அப்போது, 80 சதவீத தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அப்பணியை முழுமையாக முடிக்காததால், புற்றுநோய் போல் அந்த அமைப்பு மீண்டும் வளர்ந்து விட்டது.இவ்வாறு, அந்த நுாலில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தினமலர்.com 

கருத்துகள் இல்லை: