சனி, 25 ஏப்ரல், 2015

பத்மினியின் ஹிந்தி ரசிகர்கள் பப்பி மீது நாலணா, எட்டணா நாணயங்களை வீசி எறிந்து வடநாட்டின் உச்சத்திற்கே...


பா. தீனதயாளன் :பத்மினி - 5. பத்மினியும் எண்பத்தாறு முத்தங்களும்
சாமர்த்தியமே உன் பெயர் மெய்யப்பனா என மெச்சும்படியாக இருந்தது செட்டியாரின் ஒவ்வொரு நகர்வும். ஏவிஎம் உருவாக்கிய வாழ்க்கை, ‘பஹார்’ என்ற பெயரில் ஹிந்தி பேசியது. தமிழில் நடித்த வைஜெயந்தியே ஹிந்தியிலும் ஹீரோயின். கையோடு, லலிதா பத்மினிக்கும் வடநாட்டில் புதிய வாசலைத் திறந்துவைத்தார் செட்டியார். வேதாள உலகம் படத்தில் இடம்பெற்ற பாம்பாட்டி நடனக் காட்சியை பஹாரில் புகுத்தினார்.
டெல்லியில் பஹாரைத் திரையில் பார்த்தவர்கள், பப்பி மீது நாலணா, எட்டணா நாணயங்களை வீசி எறிந்து புதுப் பூவைக் கொண்டாடினர். நேரில் அதை ரசித்த ஹிந்தி சினிமாக்காரர்கள் சென்னைக்கு விரைந்தனர். உடனடியாக பத்மினிக்கு லட்ச ரூபாய்க்கு சம்பளம் பேசி, 50,000 ரூபாயை அட்வான்ஸாக கொடுத்த பின்னரே நிம்மதியாக ஜிலேபியும் சமோசாவும் சாப்பிட்டார்கள்.
பத்மினி நாயகியாக நடித்த முதல் ஹிந்திப் படம், ஜெமினியின் ‘மிஸ்டர் சம்பத்’. (தமிழில் மிஸ் மாலினி).
ஏவிஎம், ஜெமினி என தென்னகத்தின் இரண்டு மெகா ஸ்டுடியோக்களின் அறிமுகம் பத்மினி. தமிழைப் போலவே வடக்கிலும் வெற்றிக்கொடியை மிகச் சுலபமாகப் பறக்கவிட்டார். பத்மினியின் சூப்பர் ஹிட் தமிழ்ச் சித்திரங்கள், ஹிந்தியில் அதிகம் தயாரானது. அவற்றில், பத்மினியைத் தவிர வேறு யாரும் அந்த வேடங்களில் உச்சம் தொட முடியாது என்கிற முதல் மரியாதையைப் பெற்றார். திலீப்குமார் தவிர, அநேக மும்பை சிகரங்களான அசோக் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த், சஞ்சீவ் குமார், ஷம்மி கபூர், தர்மேந்திரா ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில், காஷ்மீர் அவுட்டோர் ஷூட்டிங் போக வாய்ப்பில்லை. அக்குறையைப் போக்கியவை, அசோக்குமாரின் கல்பனா, ராகினி உள்ளிட்ட தயாரிப்புகள். பத்மினிக்கு காஷ்மீரை கையோடு சென்னைக்குக் கொண்டுவரும் அளவு, அத்தனை பிடித்துப்போனது. குளிரின் ரோஜாவனத்தில் ஆப்பிள் மெத்தையாக ரசிகர்களின் கண்களுக்கு சுகமாகக் காட்சியளித்தார்.
மீண்டும் தர்மேந்திரா - மீனாகுமாரி ஜோடியுடன், காஜல் சினிமாவின் அவுட்டோருக்காக, பத்மினியும் ஆசை ஆசையாக காஷ்மீர் சென்றார். ஆனால் பகைவர்கள் படையெடுத்து வந்ததால், இடத்தை காலி செய்ய வேண்டியதாயிற்று. ‘வேலைக்காரன்’ அமலாபோல் உருகும் பனியில் பத்மினி ஆட வேண்டிய நடனம், பாதியில் நின்றது. மிச்சம், மும்பை ஸ்டியோவில் தொடர்ந்தது. அங்கு, பனிக்கட்டிகளுக்குப் பதிலாக உப்பைக்கொண்டு தளத்தை நிரப்பினர். புழுக்கத்தின் உச்சகட்டத்தில் ஆடி முடித்தார் பத்மினி. என்னே ஓர் உப்பான அனுபவம்!
ஆஷா ஃபரேக் தவிர, வடக்கில் யாரும் உருப்படியாக நாட்டியம் கற்றவர்கள் கிடையாது. பப்பியுடைய அசாத்திய அசைவுகளில் ஆச்சரியம் அடைவது, ஹிந்தி கனவுக்கன்னிகளின் அன்றாட இயல்பானது. மீனா குமாரி போன்ற நடிப்பின் இமயங்கள்கூட, பத்மினியின் சிஷ்யையாகப் பாதங்கள் தூக்கி ஆடி உள்ளனர்.
நர்கீஸ், பிருத்விராஜ், ஜெயராஜ் போன்ற பிரபலங்களுடன் பத்மினி இணைந்து நடித்த  பர்தேஸி,  இந்திய - ரஷிய கூட்டுத் தயாரிப்பு. கலரில் சினிமாஸ்கோப்பில் பிரம்மாண்டமாக மூன்றே மாதங்களில் தயாரானது. பர்தேஸி ஷூட்டிங்குக்காக 1957-ல், பத்மினி ரஷ்யாவுக்குச் சென்றார். லைட்பாய்ஸூக்கு பதிலாக லைட் கேர்ள்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் நட்சத்திரங்களும் அங்கு சமமாகவே நடத்தப்பட்டதில், பத்மினிக்கு ஆச்சரியம். நடிப்பதற்காகக் கொஞ்சம் ரஷிய மொழியைக்கூட பத்மினி கற்றுக்கொண்டார். ஷம்மி கபூருடன் பத்மினி ஜோடியாக நடித்த வெற்றிச் சித்திரம் ‘சிங்கப்பூர்’. முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே உருவானது. தமிழில் சிவாஜி, பத்மினியின் பிதாமகன் என்றால், ஹிந்தியில் ராஜ் கபூர். ஒரே நேரத்தில், கணேசன் – ராஜ் கபூர் என்று இரு தண்டவாளங்களில் இந்தியாவெங்கும் புகழின் திசைகளில் தடையின்றி ஓடியது பத்மினியின் நட்சத்திர ரயில்.
நர்கீஸ் மூலம் ராஜ் கபூர், பத்மினியின் நிழல் காதலன் ஆனார். வடக்கில், 1946 முதல் 1957 வரையில் ஆடிக்களித்தது ‘ஆவாரா’ புகழ், ராஜ் கபூர் - நர்கீஸ் ஜோடி. ராஜ் கபூரின் மனைவி என்கிற சட்டரீதியான அந்தஸ்து தனக்குக் கிடைக்காது எனத் தெரிந்ததும், நர்கீஸ் தன் காதலுக்கு முற்றும் போடவேண்டி வந்தது. ராஜ் கபூரின் வசம் அன்பின் ஐஸ்கிரீமாக உருகி நின்ற நர்கீஸ், ‘மதர் இந்தியா’ செய்த மாயத்தால், சுனில் தத்தை மணந்துகொண்டார். 
‘சோரி – சோரி’ ஏவிஎம் தயாரிப்பு. சென்னையின் செல்வ மகள்கள், ராஜ்கபூர் - நர்கீஸ் ஜோடி நடிப்பதை நேரில் காண ஏவிஎம்முக்கு செல்வது வாடிக்கையானது. பத்மினியும் அவ்வகையில் முதன்முதலாக நர்கீஸை சந்தித்தார். அதுமுதல், நர்கீஸும் பப்பியும் நல்ல தோழிகள். பப்பியைவிட ராகினிக்கு நர்கீஸ் என்றால் அத்தனை உயிர். நட்சத்திர ஓட்டலில் நர்கீஸ் ஓய்வு எடுத்தாலும், வீட்டுக்கு அழைத்துவந்து, தங்களின் அபிமான நடிகைக்கு ஒரு வாய் உப்புமாவாவது ஊட்டிவிடுவது திருவாங்கூர் சகோதரிகளின் உற்சாக விருந்தோம்பல். நட்புக்கும் உப்புக்கும் நேரடித் தொடர்பு எக்கச்சக்கம். செஞ்சோற்றுக் கடன்போல், பப்பி வீட்டு உப்புமாவுக்காக நர்கீஸ் செய்த நற்பணி, மும்பை சென்றிருந்த பத்மினிக்கு  ராஜ் கபூரை  அறிமுகம் செய்தது.
நர்கீஸ் இல்லாமல் சுவரில் முட்டி மோதி நாளெல்லாம் அழுது, நட்சத்திரத் துணைக்கு என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்த ராஜ் கபூருக்கு பத்மினியைப் பிடித்துவிட்டது. நர்கீஸுக்குப் பிறகு ராஜ் கபூருடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் நம்ம ஊர் பத்மினி! ராஜ் கபூர் குறித்து தென்னிந்தியர்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை விரிவாகச் சொல்வது பத்மினிக்குப் பிடித்தமானது.
இனி,  ராஜ் கபூர் பற்றி பத்மினி சொன்னது.
(உங்களுக்காக அவரது உற்சாகமூட்டும் உதட்டுப்பூக்களில் இருந்து அமுத மழையாகப் பொழிகிறது! பெரிசுகள் நிதானமாகப் பருகிச் சுவையுங்கள்! உறங்கும் உங்களின் இளமை மீண்டும் வீறிட்டு விழித்தெழலாம், ஜாக்கிரதை!)
‘1953-ல் இருந்து ராஜ் கபூர் ரொம்ப நெருக்கமானவராக இருந்தார். ராஜ் கபூருக்கு என்னுடைய நடிப்பாற்றலிலும் நாட்டியத் திறமையிலும் மிகுந்த நம்பிக்கை இருந்தது. எனது அழகையும் அவர் பாராட்டியது உண்டு. ’தன்னுடன் நடித்த நாயகிகளில் பத்மினி தலைசிறந்த அழகி!’ என்று  பத்திரிகைகளில் பெருமையாக பேட்டி அளித்திருக்கிறார்.
‘ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹ்தி ஹை’ படத்தில் என்னை நாயகியாக நடிக்க ராஜ் கபூர் அழைத்ததும், அதற்கு எவ்வளவோ எதிர்ப்பு இருந்தது. முதல் முறையாக அவருடன் ஹீரோயினாக நடித்தேன். என்னாலே அந்த ரோலை செய்ய முடியுமான்னு ரொம்ப யோசனையாயிருந்தது. நீதான் நடிக்கணும்னு அவர் பிடிவாதம் பிடித்தார். மூன்று வருடங்கள் தொடர்ந்து அதன் ஷூட்டிங் நடந்தது. என்னால் மறக்க முடியாத அனுபவம்
ராஜ் கபூர்
 
ராஜ் கபூருடன் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தபோதும், அவற்றை ஏற்க முடியவில்லை. எனக்குத் திருமணமாகிவிட்டது. தொடர்ந்து ராஜ் கபூரின் ஆஷிக்கில் மட்டும் நடித்தேன். அதில் விறுவிறுப்பான நடனம் வேறு. ஐந்து மாத கர்ப்பவதியான நான், மருத்துவ ஆலோசனையைக் கேட்டு ஆடவேண்டியதாயிற்று. அயர்வு சோர்வு இல்லாமல் வேலை செய்வார். ஷாட்டில் முழு திருப்தி கிடைக்கும் வரையில் விடமாட்டார். அதனால், அவருடன் நடிக்கிறவர்களுக்கு மிகுந்த பொறுமை வேண்டும்.
அவர் எப்போது கூப்பிட்டாலும், நடிக்கத் தயாராக செட்டில் எல்லோரும் காத்திருப்போம். அந்த வரிசையில், அவருடைய தந்தை பிருத்விராஜ் கபூரும் உட்கார்ந்திருப்பார்! பார்க்கப் பரிதாபமாக இருக்கும். ‘என்ன செய்வது? அவன் எப்போது என்னை அழைப்பானோ தெரியவில்லையே...’ எனப் புன்னகை செய்வார். சில சமயம், நாட்டியக் காட்சிகள் நாள் முழுதும் படமாகும். அதில் வரும் ‘ஓ வசந்தி’ என்ற பாடல், இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.
ஷூட்டிங்கில் சிடுசிடுவென்று தோன்றினாலும் மற்ற சமயங்களில் கலகலப்பாக வேடிக்கையாகப் பேசுவார். விளையாட்டுக்காக, நிறைய குறும்புகள் செய்வார். மணமான பிறகு, ராஜ் கபூருடன் நான் நடித்த கடைசி ஹிந்திப் படம் ‘மேரா நாம் ஜோக்கர்’. இந்தக் கடைசியும் ஒரு ரெக்கார்டு! மிக நீளமான சினிமாவானதால், இரண்டு தடவை இடைவேளை விட்டார்கள்.
ஃபிலிம் ஸ்டார் கிரிக்கெட் என்றால் ராஜ் கபூர் முன்னணியில் வந்து நிற்பார். அவரே வடக்கின் கேப்டன். ஒரு குழுவுக்குப் பதினோரு பேர் என்கிற கணக்கெல்லாம் கிடையாது. இருபது பேர் வரையில் இருப்போம்.
*
உடல் நலம் சரியில்லை என பத்மினியிடம் இருந்து ஒரு நாளும் தகவல் வராது. பொய் வயிற்று வலி, தலை வலி,  காய்ச்சல், மாதவிலக்குக் கோளாறு என்று ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டதாக வரலாறு கிடையாது. மேரா நாம் ஜோக்கரில் நடித்த நேரம். பிஞ்சுகளை மாத்திரம் பாதிக்கும் டிப்திரியா என்கிற தொண்டைப்புண் ஜுரம் நிஜமாகவே பாதித்தது. முதலும் கடைசியுமாக, படப்பிடிப்பு ரத்தானது. பத்து நாள்கள் படுத்த படுக்கையாகக் கிடந்தார் பத்மினி. அனைவருக்கும் ஆச்சரியம். அதிர்ச்சி! மிகப்பெரிய சர்க்கஸ் அரங்கம். பத்மினி பார் ஆடவேண்டி போடப்பட்டது. ராஜ் கபூர், ஹீரோயினுக்கு முதலில் குணமாகட்டும் என்று செட்டை கலைத்துவிட்டார்.
 
பத்மினி – ராஜ் கபூர் இணைக்கு, ஆபாசத்தின் எல்லைகள் தெரியாது என்கிற புகாரும் எழுந்தது.
ஜெமினி கணேசனின் மகள் ரேகா வழங்கிய நேர்காணல், ஸ்ரீதரின் சித்ராலயா இதழில் வெளிவந்தது. சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தைவிட, 1971-ல் பத்மினி மீதான ரேகாவின் மறைமுக அவதூறின் சூடு அதிகம். பத்மினியோடு மூவேந்தர்கள் நடித்த திருமகள், குலமா குணமா, ரிக்ஷாகாரன் போன்றவைத் தொடர்ந்து ரிலீஸான சமயம். பத்மினியின் தமிழக இமேஜை  கெடுக்கும் விதமாக ரேகாவின் வார்த்தைகள் புழுதியைக் கிளப்பின.
‘இங்கு முத்தக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கூறுபவர்கள், வெளிநாட்டுக்கு அனுப்பும் பிரிண்டுகளில் நடிக்கிறார்கள். ராஜ் கபூர் படமொன்றில், தமிழ்நாட்டு நடிகை 86 முத்தங்கள் கொடுத்து இருக்கிறார். அதுதான் அந்நிய தேசங்களுக்கு அனுப்பப்பட்டது. இது, பம்பாய் பட உலகில் எல்லாருக்கும் தெரியும்’.
பத்மினி, அமெரிக்காவில் இல்லறஜோதியாக ஒளிவிட்ட சூழல். சகோதரிக்காக தங்கை ராகினி பரிந்து பேசினார்.
‘நெவர். ரேகா குறிப்பிடும் அந்த நடிகை, நிச்சயம் அக்கா பத்மினியாக இருக்கமாட்டார். கெய்ரோவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரிசளிப்பு விழாவின்போதே, நிறைய பேர் பப்பியை அங்கே நடிக்க அழைத்தார்கள். ‘உங்கள் நாட்டுப் படங்களில் கவர்ச்சியும் செக்ஸும் ஓவர். அதுபோன்ற வேடங்களை நான் ஏற்பதில்லை’ என மறுத்துவிட்டார் அக்கா. பர்தேஸியில்கூட, அவள் இந்தியப் பெண்ணாக நடித்தாளே தவிர, கிளாமராக அல்ல.
ராகினி
 
கவர்ச்சி மற்றும் செக்ஸ் வேடங்களில் நடிக்க மறுத்ததாலேயே, அக்காவுக்கு அதிகமான ஹிந்திப் படங்களில் நடிக்கமுடியாமல் போய்விட்டது. தமிழ், ஹிந்தி எதுவானாலும் கேரக்டரை கேட்டுவிட்டே ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவோம். அநாதை ஆனந்தனின் ஹிந்தி ரீமேக்கான ‘சந்தா அவுர் பிஜிலி’யில் குளிக்கும் காட்சிகள் இருந்தன. கேமராமேனிடம் சில சீன்களை மாற்றி எடுங்கள். ஒரேயடியாக செக்ஸியாக வேண்டாம் என்றார் அக்கா’.
‘தமிழில் வெகு சிறப்பாக நடித்த நீங்கள், ஹிந்தியில் கவர்ச்சி நாயகியாகத்தானே இருந்தீர்கள்?’ - 1997 ஆகஸ்டில்,  பத்மினியிடம் கேட்டபோது –
‘ராஜ் கபூர் சொல்வார். நான் இந்தியாவுக்கு மட்டும் படமெடுக்கவில்லை. உலகம் முழுவதும் என் படங்கள் வெற்றிபெற வேண்டும்’ என்று. மேரா நாம் ஜோக்கரில் நான் இளைஞன் வேடத்தில் வருவேன். என் கதாபாத்திரத்தின் தேவையை நான் பூர்த்தி செய்தாக வேண்டும். எப்போதுமே தங்கப்பதுமையாக இருக்க முடியுமா? ரஷ்யாவில், பெண் குழந்தைகளுக்குத் தமிழக பத்மினியின் பெயர் வைத்தார்கள் என்றால், அது ராஜ்கபூருக்கு ஜோடியாக நடித்ததன் பயனால் மாத்திரமே’.
பத்மினி நடித்து தேசிய விருதுபெற்ற ‘குழந்தைக்காக’, ஹிந்தியில் ‘நன்னா பரிஸ்தா’ என்ற பெயரில் வெளியானது. பப்பி அதிலும் நடித்தார். அதில் பத்மினி இடம்பெற்ற காட்சிகள் சில, நிஜத்தில் தமிழர்களுக்குத் தலைகுனிவாகப் போனது. பெரும் கண்டனங்களும் எழுந்தன.
திலீப் குமார் - வைஜெயந்தி மாலா நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரிக் குவித்தது ‘கங்கா ஜமுனா’. திலீப் குமாரின் தயாரிப்பு. அதில், வைஜெயந்தி வில்லனால் மானபங்கம் செய்யப்படும் காட்சி. தமிழ் வார இதழ் ஒன்றின் அதிகபட்ச பாராட்டுதலைப் பெற்றது. கங்கா ஜமுனா, தமிழில் ‘இரு துருவம்’ என்ற டைட்டிலில் பி.எஸ்.வீரப்பாவால் ரீமேக் ஆனது. சிவாஜி - பத்மினி நடித்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் 1971 தைத் திருநாளில் வெளியானது. வசூலில் தோல்வி. பத்மினி, பி.எஸ்.வீரப்பாவால் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் ஆபாசமாக இருந்தன. பத்மினியா இப்படி என்கிற பெருமூச்சு, அனலாகக் கிளம்பியது தாய்க்குலத்திடமிருந்து  .dinamani.com

கருத்துகள் இல்லை: