அர்ச்சகர் மாணவர்கள்அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
பதிவு எண் : 189/09
50, அர்மேனியன் தெரு, பாரிமுனை, சென்னை
வா. அரங்கநாதன்
மாநில தலைவர்
பத்திரிகை செய்தி
கோரிக்கைகள்
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் பயிற்சி பெற்று 8 ஆண்டுகள் ஓடிவிட்டதால் வயது முதிர்ந்து வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 ஊதியமாக வழங்க வேண்டியும் தமிழக அரசை வேண்டுகிறோம்.

206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம்.
எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007 – 2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம், ‘ஆகமவிதிப்படி பார்ப்பன சிவாச்சாரியார்களைத் தவிர பிற சாதியினர் அர்ச்சகராகி, கருவறையில் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும், சிலையிலிருந்து கடவுள் வெளியேறிவிடுவார்’ எனக் கூறி மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு தடை பெற்றுவிட்டனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கியதுடன், உச்ச நீதிமன்றத்தில் தங்களையும் வழக்கில் முக்கிய தரப்பினராக சேர்க்க வேண்டும் என போராடி வெற்றி பெற்றது, வழக்கை மனித உரிமைப்பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.
தமிழக அரசு 1971-ம் வருடம் வாரிசுரிமைப்பபடி அர்ச்சகர் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இச்சட்டத் திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிரானது என மதுரை மீனாட்சியம்மன் கோவிலைச்சேர்ந்த பார்ப்பனர்களும், 2 மடாதிபதிகளும் நேராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ராஜகோபாலாச்சாரியார், சங்கராச்சாரியார், ஜீயர் ஆகியோர் இவர்களுக்கு ஆணை வழங்கியதுடன், பிரபல வழக்குரைஞர் நானி பல்கிவாலாவை வாதாட ஏற்பாடும் செய்து கொடுத்தனர். வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து 14-03-1972 அன்று தீர்ப்பளித்தது. “அர்ச்சகர் என்பவரும் கோயில் ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து தமிழக அரசு இயற்றிய சட்ட திருத்தம் செல்லும். அரசை பொறுத்தவரை, அர்ச்சகர் நியமனம் மதசார்பற்றது, மத நடவடிக்கையாக கருத முடியாது” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
“அதே சமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும், ஆகமங்கள்படி குறித்த வகையைச் (Denomination) சேர்ந்தவராகத்தான் இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு, பழக்கவழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர், சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும்” என்பதை அரசு கருத்தில் கொண்டு, அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதை அன்றே தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார். இன்றுவரை அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாமல் இருப்பதற்கு காரணமே, மேற்படி அறிவார்ந்த நீதிபதிகள் வழங்கிய இத்தீர்ப்புதான். அரசியலமைப்புச் சட்டத்தில் பார்ப்பனர்களின் மத உரிமைகளுக்கு பாதுகாப்பாக உள்ள சரத்து 25, 26-ஐ ஒழிக்க வேண்டும் என்று பெரியார் பேசினார், இறுதி மூச்சுவரை கருவறை தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். இதன் விளைவாக தி.மு.க அரசாங்கமும் அதன்பிறகு அ.தி.மு.க அரசாங்கமும் அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்குறிப்பிட்ட சரத்துக்களை திருத்தியமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து பல கடிதங்கள் எழுதின.
தந்தை பெரியார்
தந்தை பெரியார், “ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார்.
1972-ம் ஆண்டின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களையும் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்த இக்குழு, 1982-ம் ஆண்டு தனது பரிந்துரைகளை வெளியிட்டது. அதில் “பூசையின்போது பிராமண அர்ச்சகர்கள் மந்திரத்தை தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடுடைய ஸ்மார்த்த பிராமணர்கள் நடராசருக்கு பூசை செய்யும் மோசடிகள், முறையாக பயிற்சியின்றி பணியில் இருக்கும் அர்ச்சகர்கள்” என ஆகமத்திற்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களை பட்டியலிட்டுள்ளது. மேற்கண்ட ஆய்விலிருந்து, “தமிழகம் முழுவதும் முறையாக பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளை நிறுவ வேண்டும், இந்து சமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும்” என அக்குழு பரிந்துரை செய்தது.
கேரளாவில் ஈழவர் சாதியைச் சார்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப் பட்டதை எதிர்த்து ஆதித்தியன் என்பவர் தொடுத்த வழக்கில், “பார்ப்பனரல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்கவழக்கத்தின்படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது” என உச்ச நீதிமன்றம் 2002–ம் ஆண்டு தீர்ப்பளித்தது. “அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள பழக்கவழக்கம், மரபுகள் செல்லத் தக்கதல்ல. அதோடு சரத்து 17-ன் படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக்குற்றம், மனித உரிமைகளுக்கு எதிரானது” என முற்போக்காக தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டுதான், தமிழக அரசு, இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டு, முதலில் அரசாணையையும், பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசரச் சட்டத்தையும் (Ordiance) இயற்றியது. உடனடியாக மதுரையைச் சார்ந்த பார்ப்பன ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம், 1972 உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசரச் சட்டத்திற்கு தடையாணை பெற்றது. இதனால் திமுக அரசாங்கம் சட்டமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்தபோது சட்டத்திருத்தத்தில் உள்ள முக்கியப் பகுதியை விட்டு விட்டு சட்டம் இயற்றியது.
“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என 2006-ல் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் மற்றும் தமிழகத்தில் நடைபெறும் பூசை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளை செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவரங்கம் ஆகிய கோயில்களில் வைணவ பயிற்சி பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி ஆகிய பள்ளிகளில் சைவ பயிற்சி பள்ளிகளும் அமைக்கப் பட்டது. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், தமிழக அரசோ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை.
archakar-bookஆலயத் தீண்டாமை, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான எமது போராட்டச் சூழலில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரையும் உச்ச நீதிமன்ற தடையாணையைக் காரணம் காட்டி, தமிழக அரசு கைவிட்ட நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் அதன் வழக்குரைஞர்களின் உதவியால் ( தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மாணவர்களை சந்தித்தனர். “கருவறைச் தீண்டாமையை ஒழிப்பது என்பது அரசால் மட்டுமே முடியும் காரியம் அல்ல. பணி நியமன பிரச்சனையுமல்ல, இது கருவறைத்தீண்டாமைக்கெதிரான, வரலாற்றுப் போராட்டம்” என்பதை விளக்கிப் பேசினோம். நாம் சங்கமாக ஒன்றுதிரண்டு, “தகுதியுடைய நாங்கள் கடவுள் சிலையை தொட்டால் எப்படி தீட்டாகும்? என மக்கள் கேள்வி எழுப்பும் போதுதான் தீர்வு கிடைக்கும்” என விளக்கினோம்.)
10-10-2009 அன்று திருவண்ணாமலையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மதுரை சிவாச்சாரியார்களுக்கு எதிராக மாணவர்களையும் ஒரு தரப்பினராக சேர்க்க வழக்காடியதன் பயனாக 8-03-2010 அன்று உச்ச நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவையும் பெற்றோம். வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், தீண்டாமையை மத உரிமையாக நிலைநிறுத்த முயலும் பார்ப்பனர்களைக் கண்டித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரமும் செய்து வருகிறோம்.
இதைத் தொடர்ந்து, அர்ச்சகர் மாணவர் சங்கமும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, மதுரை – திருவண்ணாமலையில் உண்ணாநிலைப் போராட்டங்கள், மீனாட்சி அம்மன் கோயிலை முற்றுகையிட்டுக் கைது, பெரியாரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தல், அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவராகிய நான் இந்து முன்னணி ரவுடிகளால் தாக்கப்பட்டது என தொடர் போராட்டத்தின் மூலமும், தொலைக்காட்சி பேட்டிகள், நாளிதழ், வார-மாத இதழ்களில் கருவறைத் தீண்டாமை குறித்து தொடர்ச்சியாக செய்திகளாக்கி மக்கள் ஆதரவை பெற தொடர்ந்து போராடி வருகிறோம்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். இதையடுத்து, சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டத்தை நடத்தி, “கருவறை தீண்டாமைக் குற்றமா? இல்லையா? இதில் சமரசம் எப்படி காண முடியும்” என கேள்வி எழுப்பி மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றோம். இதனை கருவறைத்தீண்டாமைக்கெதிரான சமூக நீதி போராட்டத்தின் பகுதியாக பார்க்க வேண்டுமென்று போராடி வருகின்றோம்.
பெரியார் சிலைக்கு மாலைகடந்த 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கிவிட்டார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டுள்ளார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குறைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார். இன்று வரை தமிழக அரசு இவ்வழக்கில் வாய்தா வாங்கிக்கொண்டு வருகின்றது. .
மதுரையில் மொத்தம் உள்ள 116 பார்ப்பன அர்ச்சகர்களில் 28 பேரும், மயிலை கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேரும்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மற்ற பார்ப்பன அர்ச்சர்கள் முறைப்படி ஆகமம் பயிலாதவர்கள். ஆனால் எங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் முறைப்படி ஆகமம் பயின்றிருந்த போதிலும் பிறப்பின் காரணமாக பாகுபடுத்தப்பட்டு வருகிறோம்.
1972 சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள கோவில்களில் உள்ள 1144 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் பார்ப்பனர்களின் பரிந்துரையின்பேரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். இது கருவறைத் தீண்டாமையாகும். அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண உதவியாக தலா ஒருவருக்கு ரூ 5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்
நாள் : 04.08.2014
இடம் : சென்னை.
அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட அர்ச்சக மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் ரூ.5000 ஊதியம் வழங்க வேண்டியும் கோரிக்கை மனு.
விடுநர்:
வா.அரங்கநாதன், மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
நெ.128, அரசமரத் தெரு, திருவண்ணாமலை.
பெறுநர்:
1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.
2. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.
3. உயர்திரு.இந்து சமய அறநிலையத்துறைச் செயலர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.
பெருமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.
பொருள்:
1. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்தி முடித்து மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்க வேண்டி
2. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இடைக்காலமாக மாதம் குறைந்தபட்சம் ரூ.5000 நிவாரண ஊதியமாக வழங்க வேண்டி
பெரியார் சிலை முன் ஆர்ப்பாட்டம்எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால் உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. காரணம் மதுரை சிவாச்சாரியார்கள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் ஆக தடை பெற்றுவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசாரணைக்காக வந்த போது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சனையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவகாசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங்கினார். தமிழக அரசு சார்பில் பி.பி.ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால் வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்ல இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.
எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ்வருவருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணையிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வா.அரங்கநாதன்
நாள் : 04.08.2014
இடம் : சென்னை. vinavu.com