சென்னை: பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கியுள்ள சினேகாவின்
காதலர்கள், சாதி வெறி பிடித்த ராமதாசுக்கு புத்தி புகட்டும் என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு
கூறியுள்ளார்.
சினேகாவின் காதலர்கள் படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. அதற்கு
முன் முக்கியத் தலைவர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டி
வருகின்றனர் தயாரிப்பாளர் கலைக் கோட்டுதயமும் இயக்குநர்
முத்துராமலிங்கனும்.
படம் பார்த்த நாம் தமிழர் கட்சித் தலைவர் இயக்குநர் சீமான், சிறப்பாக
உள்ளதாக பாராட்டியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித்
தொடர்பாளரான வன்னியரசு, இந்தப் படம் குறித்து பெரிய அறிக்கையே
வெளியிட்டுள்ளார்.
அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும்
அக்கட்சியினரின் சாதி வெறியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமதாசுக்கு புத்தி புகட்டும் 'சினேகாவின் காதலர்கள்'! - வன்னியரசு
வன்னியரசு இதுகுறித்து எழுதியிருப்பதாவது:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பெரும் ஏமாற்றத்தை மட்டுமல்ல மன
உளைச்சலையும் தந்தது. மானுட விடுதலைக்கு எதிரான -மனித நேயத்திற்கு எதிரான
மதவெறியையும் சாதிவெறியையும் வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்துவதற்காக தன
வாழ்நாளெல்லாம் உழைத்த தந்தை பெரியாரின் உழைப்பு தமிழகத்தில் வீணாகிவிட்டதே
என்கிற வேதனை வாட்டிக்கொண்டே இருக்கிறது.
தந்தை பெரியாரின் கொள்கைகளை செயல் வடிவமாகக் களமாடும் விடுதலை
சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தோல்வி என்பது பல
கேள்விகளை முன்னிறுத்துகிறது. தருமபுரியில் சாதிவெறியும் கன்னியாகுமரியில்
மதவெறியும் வெற்றி பெற்றதன் மூலம் தந்தை பெரியார்,புரட்சியாளர் அம்பேத்கர்
போன்றோரின் கொள்கைகளும் உழைப்பும் தோற்று போய்விட்டன. எத்தனையோ
இலக்கியங்கள்,கவிதைகள், சினிமாக்கள்கூட சாதியத்திற்கு எதிராகவும்
மதவாதத்திற்கு எதிராகவும் படைக்கப்பட்டுள்ளன. அவையும் தோற்றுவிட்டதாக தான்
பார்க்கமுடிகிறது. சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் அவர்கள் தோற்று போனதைகூட
இப்படிதான் வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டும்.
சாதிவெறியை தமது சமூகத்தின் மீது திணித்து அதில் கவுரவம் எனும் விஷத்தை
விதைத்து அரசியல் பண்ணும் பா.ம.க. ராமதாசின் அயோக்கியத்தனம் மனு தரும
காலத்தில் கூட இருந்தது இல்லை. காதலில் கூட அரசியல் பண்ணும் கேவலமான இழி
பிறவியாக தமிழக அரசியலில் வளம் வருகிறார். இவரோடுகூட கூட்டு வைப்பவர்களை
என்னவென்று சொல்வது?
தருமபுரி நத்தம்சேரியை சூறையாடிவிட்டு வெட்கமே இல்லாமல் சிங்கள இனவெறியைக்
கண்டிப்பதும், இளவரசனை கொன்றுவிட்டு தமிழகத்தில் படுகொலைகள் அதிகமாக
நடப்பதாக அறிக்கை விடுவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது (கொலைகார்களே
அறிக்கை கொடுப்பது தான்).
இத்தகைய சூழலில்தான் "சினேகாவின் காதலர்கள்" திரைப்படம் பார்க்க தமிழன்
தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டுதயம் அழைத்திருந்தார். கதைகளமே
வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சினிமா ஹீரோத்தனமாகதான்
இருக்கும். ஆணாதிக்க சினிமாவில் விதி விலக்காக சினேகா, ஹீரோவாக வலம்
வருகிறார். சினேகா கல்லூரியில் படிக்கும் போது காதல், வேலை கிடைத்ததும்
காதல் என்று சமூகத்தில் ஒவருவரும் எதிர்கொள்ளும் காதலை கவிதையாக காட்டி
இருக்கிறார்கள். "காதலிச்ச உடனே உன்னோட படுத்துடனுமா?" என்று சினேகா
கேட்பது ஆணாதிக்க சிந்தனை மீது நெருப்பை எறிவது போலுள்ளது.
நிறைவாக கொடைக்கானலில் இளவரசன் மீதும் காதல் கொள்கிறாள்.இளவரசன்
மறுப்பதற்கான காரணத்தை சொல்லும் போது தருமபுரி சம்பவம்தான் நினைவுக்கு
வருகிறது.
இதான் சினேகாவின் கதை
செருப்புத் தைக்கும் அருந்ததியர் சமூகத்து இளவரசன் மீது காதல் கொள்கிறாள்
ஆதிக்க சாதி பெண் ரம்யா. செருப்பு தைக்கும் இடத்திற்கும் இளவரசன் வசிக்கும்
சேரிக்கும் தேடி தேடி போய் காதலிக்கும் ரம்யா, இளவரசனை கூட்டிக்கொண்டு
போய் பதிவு திருமணம் பண்ணுகிறாள். செய்தியை அறிந்த ரம்யா குடும்பத்தினர்
வழக்கம் போல் சாதி வெறியுடன் குதிக்கின்றனர். இச்செய்தியை அறிந்த ரம்யா
இளவரசனை மட்டும் தப்பித்துப் போக விட்டு பெற்றோர் தன்னை ஒன்னும் பண்ண
மாட்டார்கள் என்று நம்பி மாலையும் கழுத்துமாக வீட்டுக்குப் போகிறாள்.
பயங்கர கோபத்தோடு காத்திருந்த பெற்றோர் "ஏண்டி இப்படி கீழ்சாதிக்கரனை
கல்யாணம் முடிச்சு கவுரவத்தை கெடுத்துட்டியே" னு பெட்ரோல் ஊத்தி சொந்த
மகளையே எரித்து விட்டு இளவரசனைக் கொலை செய்ய அலைகின்றனர். சாதிம
வெறியர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டரே நேரடியாக உதவ கத்தியோடு கொடைகானல்
போகிறார் .
அங்கு இளவரசன் நண்பன் ஒருவனை சந்தித்து தண்ணி வாங்கிக் கொடுத்து, இளவரசனைப்
பற்றி கேட்க.. நண்பனோ, "உங்க சாதி கவுரவத்த காப்பாத்த ஊரு தாண்டி மலை
தாண்டி வருவீங்களோ?" னு கேட்ட அடுத்த நிமிடத்தில் நண்பன் கொலை
செய்யப்படுகிறான்.
சாதி இந்துக்களின் எடுபிடியாக அடியாளாக போலீஸ் எப்போதுமே இருப்பதை
இக்கதாபாத்திரம் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.
பொதுவாக காதலை சொல்லாத எந்த திரைப்படமும் இல்லை என்கிற அளவில் தான்
திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் காதலை
திரைப்படமாக எடுக்கக் கூடாது என்று தடை விதித்தால் திரைப்பட உலகமே
ஸ்தம்பித்து போய்விடும்.
அந்தளவுக்கு காதல்...காதல்.. என்று காதலித்து கொண்டிருக்கிறார்கள். இச்
சூழலில் தான் காதலை வைத்து அதில் சாதிகவுரவத்தை நுழைத்து அருவருப்பான
அரசியல் செய்ய ஆரம்பித்தார். இந்த அருவருப்பை திரையுலகத்தினர் பலர்
கண்டித்தாலும் திரைப்படமாக எடுக்க யாரும் துணியவில்லை.
இச்சூழலில் தான் மிக துணிச்சலாக சினேகாவின் காதலர்கள் திரைப்படத்தை
தயாரித்து இருக்கிறார் அண்ணன் கலைகோட்டுதயம். அவருக்கும் சிறந்த
திரைக்கதையோடு சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக இயக்கிய அண்ணன்
முத்துராமலிங்கன் உள்ளிட்ட திரைப்பட குழுவினரை வரலாறு கண்டிப்பாக
வாழ்த்தும்....பாராட்டும்.
-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வன்னியரசின் இந்த அறிக்கை புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக