டெல்லி: பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை
அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும்,
ரயில்வே கட்டமைப்புத் துறையில் 100 சதவீத அளவுக்கு அன்னிய நிறுவனங்கள்
நேரடி முதலீடு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காப்பீட்டுத் துறையில் 26
சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக
உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இரு வாரங்களுக்கு முன்பு ஒப்புதல்
வழங்கியது. இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளிலும்
அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: மத்திய
அமைச்சரவை ஒப்புதல்
நாட்டின் 70 சதவீத ராணுவத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டுவந்த நிலையில்
அரசின் புதிய முடிவால் உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு
உருவாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்டமைப்பு நவீனமயமாக்கல், புதிய அதிவிரைவு ரயில்கள், சரக்குப்
போக்குவரத்துக்கென சிறப்பு இருப்புப் பாதைத் தடங்கள் அமைத்தல் உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு போதிய நிதியாதாரம் இல்லாமல்
ரயில்வே துறை திணறி வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற திட்டங்களைச்
செயல்படுத்துவதற்கு 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல்
வழங்கியிருப்பதன்மூலம் ரயில்வே துறைக்குத் தேவையான நிதி கிடைக்கும் என்று
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபடும் 16
வயதுக்குள்பட்ட சிறார்களை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்
விசாரிக்கும்வகையில் சிறார் சட்டத்தை திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.
இதனிடையே, நீதிபதிகள் நியமனத்துக்கு நீதிபதிகள் குழு பரிந்துரைக்கும்
நடைமுறையை மாற்றி, தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கு வழிவகை
செய்யும் மசோதாவைக் கொண்டுவருவது குறித்து முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை
ஒத்திவைத்துள்ளது.
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக