சென்னை: திமுகவில் இருந்து மு.க. அழகிரியை அறவே நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி அக்கட்சியில் தென் மண்டல அமைப்புச் செயலராக இருந்து வந்தார். அவர் கருணாநிதியின் மற்றொரு மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து போஸ்டர்களை அடித்து ஒட்டி கலகக் குரல் எழுப்பி வந்தனர். இதனால் அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க. அழகிரி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை தோற்கடிக்க முழு வீச்சில் வேலை செய்து வருகிறார். காங்கிரஸ், பாஜக, மதிமுக என அனைத்து எதிர்க்கட்சி வேட்பாளர்களும் மு.க. அழகிரியை சந்தித்து பேசி வருகின்றனர்.
இதனால் திமுக தலைமை கடும் கோபத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை திமுக தலைவர் கருணாநிதி சந்தித்தார். அப்போது, மு.க. அழகிரியை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாநிதி, மு.க. அழகிரியை தற்காலிக நீக்கம் செய்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த நோட்டீஸுக்கு அழகிரி விளக்கம் கொடுக்கவில்லை.
மேலும் திமுகவையும் திமுக தலைவர்களையும் விமர்சிக்கும் வகையிலும் அழகிரி தொடர்ந்து நடந்து கொள்கிறார். பேசி வருகிறார்.. ஆகையால் நானும் பொதுச்செயலர் அன்பழகனும் கலந்து பேசி மு.க. அழகிரியை திமுகவில் இருந்து அறவே நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கிறோம் என்றார். இந்த பேட்டியின் போது மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.
திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கருணாநிதியின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்னர் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள "மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை, தலைமைக் கழக அறிவிப்பு!" என்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தி.மு.க. தென் மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததனால், கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கழகத் தலைமையையும் - கழக முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாலும் தி.மு.கழகத்திலிருந்து அறவே நீக்கி (DISMISSED) வைக்கப்படுகிறார்.
இவ்வாறு திமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.tamil.oneindia.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக