முதல்வர் தனிப்பிரிவுக்கு போகும் பல கடிதங்களில் ஒவ்வொரு காப்பி
(எப்படியோ) நமக்கும் வந்து சேர்கின்றன. அவற்றில் உள்ள சில விஷயங்களை எமது
செய்தியாளர்களை விட்டு விசாரிக்கிறோம். எம்மால் ஏற்றுக்கொள்ளப்படும்
விஷயங்களை வெளியிடுகிறோம். அந்த விதத்தில் இதோ, மற்றுமொரு கடிதம்:
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்
முதல்வர் அலுவலக தனிப்பிரிவு
தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை 600 009
பொருள்: தயவு செய்து நடிகர் ராமராஜனை தருமபுரி தொகுதி பிரச்சாரத்துக்கு அனுப்ப வேண்டாம் என வேண்டுகோள்
எங்கள் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களே
தாயே உங்களை கண்டு வணங்குகிறோம். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அ.தி.மு.க. சார்பில் எங்கள் தாழ்மையான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
நடிகர் ராமராஜன் தருமபுரி தொகுதிக்கு நம் கழக வேட்பாளர் பி.எஸ்.மோகனை ஆதரித்து வருவதாக கேள்விப்படுகிறோம். தயவு செய்து அந்த திட்டத்தை கைவிடும்படி கேட்டு கொள்கிறோம்.
இந்தமுறை, நடிகர்களின் பேச்சை கேட்க பொதுமக்கள் விரும்பவில்லை. “சிங்கமுத்து, தியாகு, செந்தில் போன்றவர்களுக்கு கூட்டம் சேரவில்லை” என்று மற்ற மாவட்ட கழக தோழர்கள் சொல்லி, “பணத்தை வீண் செய்யவேண்டாம்” என்று எங்களுக்கு தகவல் சொல்லி வருகின்றனர். அனிதா குப்புசாமி போன்ற ஒரு சிலருக்கே கூட்டம் கூடுகிறது என்று நம் விழுப்புர மாவட்ட கழகத்தினர் தகவல் அனுப்பினர்.
இங்கு பா.ம.க சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸ் கடந்த பல மாதங்களாக நடிகர்களை கிண்டல் செய்து வருகிறார். பா.ம.கவினர் திண்ணை பிரச்சாரம் செய்து மக்களிடம் சினிமா நடிகர்கள் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்றி விட்டுள்ளனர்.
நடிகர்கள் சிங்கமுத்து, ராமராஜன் போன்றவர்கள் இங்கு வந்தால் நமக்கு எதிர்வினையாக மாறும் சூழ்நிலை உள்ளது. தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, தருமபுரி வந்தபோது விஜயகாந்த் கட்சியினர் கூட அவரைத்தவிர வேறு எந்த நடிகரையும் பிரச்சாரத்துக்கு கூப்பிடவில்லை.
ராமராஜனை அனுப்பி பிரச்சாரம் செய்தால், மக்கள் வேடிக்கை பார்ப்பார்கள், நம்மை சீரியசாக எடுத்து கொள்ள மாட்டார்கள். தயவு செய்து ராமராஜன் போன்றவர்களை தருமபுரி தொகுதிக்கு அனுப்ப வேண்டாம் என்று மன்றாடி கேட்டு கொள்கிறோம்.
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்க! புரட்சி தலைவி அம்மா வாழ்க!
தாழ்மையுடன்
திருமதி M. ரேணுகாதேவி, வார்டு கவுன்சிலர், தருமபுரி நகராட்சி
திரு B. சுருளிராஜன், வார்டு கவுன்சிலர், தருமபுரி நகராட்சி
திரு G. திருப்தி, காரிமங்கலம் அ.தி.மு.க. பொருளாளர் சுப்பிரமணி
காரிமங்கலம் அ.தி.மு.க. அவைத்தலைவர் நாகராஜன்
காரிமங்கலம் யூனியன் சேர்மன் திருமதி தமிழ்செல்வி குமார்
காரிமங்கலம் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் குமரவேல்
மற்றும்
காரிமங்கலம் அ.தி.மு.க. இளம்பாசறை உறுப்பினர்கள்
இடம்: காரிமங்கலம், தருமபுரி மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக