சனி, 8 ஜூன், 2013

கேரள அரசு கெடு முடிகிறது : சிறுவாணி மூடப்படும் அபாயம்

கோவை: கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரளாவில்
உள்ளது. மழை இல்லாததால், அணையில் நீர் வற்றிவிட்டது. நிலத்தடி மற்றும் பழங்கால தடுப்பணைகளில் தேங்கிய நீரை ஜூன் 10ம் தேதி வரை பெறலாம். அதற்கு பிறகு குடிநீரை உறிஞ்சி எடுக்க கூடாது என தமிழக அரசுக்கு கேரள அரசு நிபந்தனை விதித்துள்ளது. நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கும் பணி கடந்த மாதம் 6ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது. தினமும் 3.4 கோடி லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படுகிறது. பருவ மழை தொடங்கிய போதிலும், அணை நீர்மட்டம் உயரவில்லை. கேரள அரசின் கெடு முடிய 3 நாட்களே உள்ளன. அதற்கு பிறகு  அணையில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட உறிஞ்ச முடியாது. எனினும் அணையில் உள்ள பழங்கால தடுப்பணை மற்றும் நீர் பள்ளத்தில் மேலும் 2 மீட்டர் ஆழத்துக்கு 23 நாட்களுக்கு தேவையான நீர் உள்ளது. நீரை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு ஒப்புதல் தராவிட்டால் சிறுவாணி அணை மூடப்படும் நிலை ஏற்படும்.


இதுகுறித்து கோவை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறுகையில், ‘அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 3ம் தேதி 60 மிமீ, 4ம் தேதி 10மிமீ, நேற்று முன்தினம் 45 மிமீ நேற்று 38 மிமீ மழை பெய்தது. அணை நீர்மட்டம் 30 செமீ (மொத்த உயரம் 15 மீட்டர்) உயர்ந்தது. அணை நீர்மட்டம் மேலும் ஒரு மீட்டர் உயர்ந்தால் நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் பெற முடியும். ஆனால், அந்தளவு நீரை பெற முடியவில்லை. தொடர்ந்து குடிநீர் உறிஞ்சி எடுக்க, கேரள அரசிடம் ஒப்புதல் பெற தமிழக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை: