ஞாயிறு, 2 ஜூன், 2013

விசாரணை முடியும் வரை சீனிவாசன் விலகல்- அதுவரை டால்மியா தலைவர்!

சென்னை: இந்திய கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் சீனிவாசன் தற்காலிகமாக விலகியிருப்பது என்று முடிவானது. குருநாத் மெய்யப்பன் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை இடைக்காலத் தலைவராக முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா செயல்படுவது என முடிவாகியுள்ளதாக தெரிகிறது. ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து ராஜீவ் சுக்லா பதவி விலகி விட்டார். பிசிசிஐ செயலாளர் பதவியிலிருந்து ஜெகதாலே விலகினார். தொடர்ந்து பலர் பதவி விலகி விட்டனர். இதனால் சீனிவாசனுக்கு நெருக்கடி அதிகரித்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் கிரிக்கெட்வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. பிற்பகலில் தொடங்கிய கூட்டம் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் முக்கிய உறுப்பினர்களான ராஜீவ் சுக்லா, ஜேட்லி ஆகியோர் பங்கேற்கவில்லை.மாறாக வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், குருநாத் மெய்யப்பன் விவகாரம், ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மேலும் சீனிவாசன் விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது ஒருதிட்டத்தை சீனிவாசன் முன்வைத்தார். அதாவது விசாரணை முடிவடையும் வரை தான் தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, இடைக்காலத் தலைவரை நியமித்து வாரியத்தை நடத்துவது, விசாரணை முடிவில் தானும், தனது மருமகனும் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் மீண்டும் தலைவர் பொறுப்பை தான் ஏற்பது என்பதே சீனிவாசனின் திட்டம். ஆனால் இதற்கு சுக்லா, ஜேட்லி போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. சிலர் ஆதரித்ததாக தெரிகிறது. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சீனிவாசனின் கடும் பிடிவாதம் காரணமாக அவரது திட்டமே வென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது விசாரணை முடியும் வரை சீனிவாசன் ஒதுங்கியிருப்பது எனவும், அதுவரை நிர்வாகத்தை ஜக்மோகன் டால்மியா நடத்துவது எனவும் தீர்மானமாகியுள்ளதாம். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. புதிய சமரசத் திட்டத்தின்படி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் சீனிவாசன். அதேசமயம்,நிர்வாகதிதல் அவர் ஈடுபட மாட்டார். விலகி இருப்பார். அவருக்குப் பதில் டால்மியா தலைமையிலான ஒரு நிர்வாகக் குழு தனியாக நியமிக்கப்பட்டு நிர்வாகத்தை நடத்தும். ஊழல் புகாரில் சிக்கியவர் டால்மியா இடைக்காலத் தலைவராகியுள்ள ஜக்மோகன் டால்மியா, பெரும் ஊழல் புகாரில் சிக்கியவர் ஆவர். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் இவர். இந்த நிலையில் தற்போது இவரை மீண்டும் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வந்துள்ளனர். இவரது பெயரை அருண் ஜேட்லியும், அனுராக் தாக்கூரும் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: