சனி, 28 ஜூலை, 2012

பெரியார் திராவிடர் கழக பிளவு தவிர்க்க முடியாது

பெரியார் திராவிடர் கழக பிரிவு: ஒருமுறை ‘அவர்களை’ பற்றியும் யோசியுங்கள்!

Viruvirupu
அரசியலுக்கு அப்பால் நின்று, தமிழர் நலன் குறித்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்த அமைப்பான பெரியார் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரு அமைப்பும், மற்றொரு பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு அமைப்பும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் பெரியார் தி.க. தொண்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தோழர் கோவை ராமகிருஷ்ணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவிவரும் கருத்து வேறுபாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே இயக்கத்தில் கருத்து வேறுபாடுகளுடன் இருந்து முடங்கிப் போவதைவிட, பிரிந்து சென்று வேறாக செயல்படுவது இரு தரப்புக்கும் நல்லது என்பது இவர்களது கருத்தாக இருந்தது. செயற்குழுவில் இந்தக் கருத்தை தெரிவித்தபோது உறுப்பினர்களில் பெரும்பான்மையோர் ( 82 க்கு 56 பேர் ) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறியுள்ளனர்.
அப்படியிருந்தும் ஒற்றுமைக்கான இறுதி முயற்சிகளை செய்ததாக குறிப்பிடும் இவ்வணியினர், “கோவை ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு திரட்டுவதிலும், ஒன்றுபடுதல் நிகழ்ந்து விடவே கூடாது என்று தடுத்து நிறுத்தும் அளவுக்கு தனிநபர்களை இழிவுபடுத்தும் அறிக்கைகளைத் பரப்புவதிலும் ஈடுபட்டனர்” என்கின்றனர்.
பிரிந்து செல்வது என்ற முடிவை தற்போது எடுத்துள்ள இந்த அணியினர், “கழகத்தின் பெயரை நாம் தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பு இருந்தும், நாகரீகமாகப் பிரிந்து விடலாம் என்று கருதியதால் – பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரை, எவர் ஒருவரும் பயன்படுத்த வேண்டாம் என்ற கருத்தை தலைமை நிர்வாகக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களான நாம் முன்வைத்துள்ளோம்” என்கின்றனர்.
இந்த ஏற்பாட்டுக்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், புதிய பெயரில் இரு அமைப்புகள் துவங்கும் நிலை ஏற்படும். இதை கோவை ராமகிருஷ்ணன் ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், பெரியார் திராவிடர் கழகத்தின் பெயருக்காக இரு தரப்பினரும் சண்டையிடும் ‘சகிக்க முடியாத’ காட்சி அரங்கேறும்.
அது அரசியல் கட்சிகளுக்கு சகஜமாக இருக்கலாம்.
ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழர் நலன்களுக்காக பாடுபடும் தோழர்களுக்கு நிச்சயம் தலைகுனிவை ஏற்படுத்தும். தலைவர்கள் எதையும் முடிவெடுக்குமுன், தமிழர் நலன்களுக்காக பாடுபடும் தோழர்களைப் பற்றி ஒருமுறை யோசித்துப் பார்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை: