திங்கள், 23 ஜூலை, 2012

கலைஞர்: அரசின் காவிரி மனுவை வரவேற்கிறேன்

சென்னை:"காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட, தமிழக அரசு மனு செய்துள்ளதை வரவேற்கிறேன் என்றும், அக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்' என, மத்திய அரசுக்கு,கலைஞர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைஞர் 
அவரது அறிக்கை:காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறேன்.
அரசின் காவிரி மனுவை
தண்ணீர் வரவில்லை:காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கடந்த 20ம் தேதி வரை, தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய 36.15 டி.எம்.சி., தண்ணீர் வந்து சேரவில்லை.குறுவை சாகுபடிக்காக, கடந்த மாதம் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, பாசனத்திற்காகத் திறக்கப்படாமல், மூன்று மாவட்டங்களின் குடி நீர் தேவைக்காக, சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 சதவீத சாகுபடி காவிரி நீரால் தான் நடைபெறுகிறது.பருவ மழையைக் காரணம் காட்டி, வறட்சிக் காலங்களில், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை, கர்நாடகம் வழங்காமல் இருக்கிறது.
இதனால்,
தமிழகத்தின் விவசாயமும், பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக, கடந்த காலங்களில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவையோ, காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையோ, கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது.

மத்திய அரசு எடுக்கவில்லை:பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என, மே 18ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்குக் கடிதம் எழுதியும், இதுவரை அந்த ஆணையத்தைக் கூட்டுவதற்காக, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. ஆனால், தி.மு.க., அரசின் முயற்சி யால், காவிரி நதிநீ நர் ஆணையம் அமைந்த போது, அதை பல் இல்லாத ஆணையம் என்று சொல்லி கிண்டல் செய்து, அதை வரவேற்காத ஜெயலலிதா, கடந்த 2002ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, காவிரி நதி நீர் ஆணையத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என, கடிதம் எழுதினார்.

கவனம் செலுத்தவில்லை:அவர் அவ்வாறு எழுதியதை, சுப்ரீம் கோர்ட் கண்டித்ததையும் மறந்து விட்டு, தற்போது அந்த காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என, பிரதமருக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வந்திருக்கிறார் என்பதையும் எண்ணிப் பார்க்கத் தான் வேண்டி யுள்ளது. மே மாதத்தில், பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, பின் கொடநாடு சென்று விட்டதால், இந்தப் பிரச்னை பற்றி நேரடியாக கவனம் செலுத்த இயலவில்லை.தமிழக அரசின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தற்போது காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் என, கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,"காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும்' என, தி.மு.க., சார்பில், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசின் சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் வரவேற்கிறேன்.இவ்வாறு கலைஞர் கூறிஉள்ளார்.

கருத்துகள் இல்லை: