வியாழன், 26 ஜூலை, 2012

அசாம் கலவரம் உச்சக்கட்டத்தில் உள்ளது

அசாம் கலவரம்: மத்திய அரசு ‘போன்’ செய்துவிட்டு அனுப்பிய துணை ராணுவம்!

Viruvirupu
அசாமில் கடந்த வெள்ளிக்கிழமை மூண்ட இனக்கலவரம் தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது. கலவரத்தில் வீடுகள் உடமைகளை இழந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசு அமைத்துள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர். முகாம்களில் தஞ்சமடைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து எண்பது ஆயிரம்.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள போடோ இனத்தை சேர்ந்தவர்களுக்கும், இடையே ஏற்பட்ட கலவரம் இது. கோக்ரஜார் மாவட்டத்தில் கலவரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. தற்போது இந்தக் கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

இதுவரை ‌கலவரம் காரணமாக பலியா‌னோர் எண்ணிக்கை 40 என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் இறந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், வெவ்வேறு பகுதிகளில் வன்முறை தொடர்கிறது.
கலவரம் காரணமாக வடகிழக்கு எல்லை பகுதியில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 31 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 30,000க்கும் அதிகமான பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கலவரக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ரயில் திருப்பி அனுப்பப்பட்டது.
கலவரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் முதல்வர் தருண் கோகாயுடன் தொலைபேசியில் பேசினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது, கலவரத்தை கட்டுப்படுத்த மேலதிக துணை ராணுவத்தினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: