செவ்வாய், 24 ஜூலை, 2012

சீனா, புதிய காலனிய சக்தி?

சனிக்கிழமை அன்று ஐஐடி சென்னையின் சீனா மையமும் சென்னை சீன ஆராய்ச்சி மையமும் இணைந்து நடத்திய நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். பிரிட்டனின் மார்ட்டின் ஜாக் (Martin Jacques) பேசினார். இவர் சீனா தொடர்பாக When China Rules the World: The End of the Western World and the Rise of a New Global Order என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சீனா பற்றி ஆழ்ந்து படித்து வருகிறார். சீனா பற்றி அவர் பேசிய TED பேச்சு இங்கே.
சென்னையில் அவருடைய பேச்சு கிட்டத்தட்ட இந்தமாதிரித்தான் அமைந்தது. ஆனால் அதற்குமேல் சற்று விரிவாகவும் இருந்தது. சீனா பற்றி மேற்குலகம் அறிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதுதான் மார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தின் நோக்கம். ஆனால் அதிலிருந்து இந்தியர்களும் நிறையப் புரிந்துகொள்ள முடியும்.
1. சீனா எப்படிப்பட்ட அரசு?
மேற்கத்திய நாடுகள் 17-18-ம் நூற்றாண்டுகளில்தான் தேசம் என்று கருத்தாக்கத்தை உருவாக்கின. அதன் விளைவாக தேச-அரசுகள் உருவாயின.
தேச-அரசு என்றால், ஒரு குறிப்பிட்ட தேசமாகத் தங்களைக் கருதும் மக்கள் ஒன்றுசேர்ந்து, ஓர் அரசை உருவாக்கி, அதற்கு இறையாண்மையை அளிப்பது.
மார்ட்டின் ஜாக் சீனாவை, தேச-அரசு என்பதைவிட நாகரிக-அரசு என்று சொல்லவேண்டும் என்கிறார். சீனாவை ஒன்றுபடுத்தும் முயற்சிகள் 2,000 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

[இந்த வேற்றுமை எனக்கு அவ்வளவு பெரிதாகவோ முக்கியமானதாகவோ படவில்லை. - பத்ரி]

2. மாவோவின் முக்கியத்துவம்

மாவோவின் ஆட்சியினால் துன்பம்தான், கொலைகள்தான் என்று மேற்கத்தியர்கள் பேசுவது கொஞ்சம் அதீதமானது என்கிறார் மார்ட்டின். சீனர்களின் கருத்து வேறுமாதிரியானது என்கிறார். அவர்கள், மாவோபின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று கருதுவதாகச் சொல்கிறார். அதுநாள்வரையில் பஞ்சம், ஒற்றுமையின்மை, எதிரிகளின் அச்சுறுத்தல் என்று இருந்த நாட்டில், பஞ்சத்தைப் போக்கியது, நாட்டை வெகுவாக ஒன்றுபடுத்தியது, எதிரிகளைத் துரத்தியது, நாட்டுக்கு வலு சேர்த்தது ஆகிய காரணங்களால் மாவோ சீனாவுக்குப் பெரும் பங்கு ஆற்றியிருப்பதாக அந்நாட்டு மக்கள் கருதுவதாக மார்ட்டின் ஜாக் சொல்கிறார்.


3. ஒரு நாடு, பல ஆட்சிமுறைகள்?

ஹாங் காங் சீனாவின் கைக்குப் போக இருந்த நேரம், உலகில், அதுவும் முக்கியமாக பிரிட்டனில் பெரும் அவநம்பிக்கை இருந்தது. சீனா ஹாங் காங்மீது பாய்ந்து அதனை விழுங்கிவிடும்; ஹாங் காங்கின் நடைமுறை, முற்றிலும் சீனாவின் பிற பகுதிகளைப் போலவே இருக்கும் என்று அனைவரும் நம்பினர். ஆனால் இன்றுவரை அப்படி ஆகவில்லை. ஒரு நாடு, இரு ஆட்சி முறைகள் என்பது தொடர்கிறது.

சீனாவுக்குத் தன் ஆட்சிமுறையை ஹாங் காங்மீது திணிப்பது அவசியமில்லை. ஹாங் காங் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டும் - அவ்வளவுதான். ஆனால் மேற்கத்திய நாடுகள் இப்படி நடந்துகொள்ளாது. உதாரணமாக, மேற்கு ஜெர்மனி - கிழக்கு ஜெர்மனி இணைப்பு நடந்தபோது என்ன ஆனது? கிழக்கு ஜெர்மனி முற்றிலுமாக விழுங்கப்பட்டு, மேற்கு ஜெர்மனியின் நடைமுறைகள் அப்படியே அங்கு திணிக்கப்பட்டது.

நாளை தைவானும் சீனாவின் பிடிக்குள் வரும். இதனைத் தடுக்கவே முடியாது. அப்போது தைவானில் பல கட்சி ஆட்சி தொடரும். இப்போது இருப்பதுபோலவே.

[இதில் எனக்கு நிறைய மாற்றுக்கருத்து உள்ளது. மார்ட்டினிடம் பலர் கேட்டது, ஏன் இது திபெத்தில் நடைமுறையில் இல்லை என்பதை. சீன இறையாண்மைக்கு அடங்கிய, முழுமையான சுயாட்சி அதிகாரம் கொண்ட ஒன்றைத்தானே இப்போது தலாய் லாமா கேட்கிறார்? இந்தக் கேள்வியை ஓரிருவர் கேட்டனர். மார்ட்டின் அதற்கு சரியான பதிலைச் சொல்லவில்லை. ஒருவேளை தைவானின் பொருளாதார பலம் ஹாங் காங் போன்றே இருப்பதால் ஹாங் காங் போல தைவானுக்கும் நிறையச் சுதந்தரம் தரப்படலாம். ஆனால் திபெத் இந்தியாவுடனான சார்பைக் கொண்டிருப்பதாலும் அதற்கு பொருளாதார வலு ஏதும் இல்லை என்பதாலும் திபெத் ஓர் எல்லைப் பிரதேசம் என்பதாலும், திபெத்தியர்கள் தலாய் லாமா என்ற மதத் தலைமையை முழுமையாக நம்புவதாலும் வேறு மாதிரியாகக் கையாளப்படுகிறதோ?]

4. சீனா, புதிய காலனிய சக்தி?

சீனா ஆப்பிரிக்காவில் பெரும் ஈடுபாடு காட்டுவதை மேற்கத்தியப் பத்திரிகைகள் தவறாகச் சித்திரிக்கின்றன. சீனா எக்காலத்திலும் மேற்கத்திய நாடுகளைப் போல காலனிய சக்தியாக இருக்காது. அது, அதன் ரத்தத்தில் இல்லாத ஒன்று. தன் நாட்டு எல்லைகளை விரிவாக்கவேண்டும் என்று அது விரும்பவில்லை. ஹாங் காங், தைவான் போன்றவை வரலாற்றுரீதியாக அதனுடைய ஆளுகைக்கு உட்பட்டவை. அதுதவிர, பிற இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கட்டுப்படுத்த சீனா விரும்பாது.

18-ம் நூற்றாண்டுவரையில் இந்தோசீனப் பகுதி (இன்றைய கொரியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பகுதி) சீன அரசின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. அப்போதுகூட, சீனா அங்கெல்லாம் தன் ஆட்சியைப் பரப்ப விரும்பவில்லை. அந்நாடுகளுடனான வர்த்தக உறவை மட்டுமே கொண்டிருந்தது. அந்நாட்டு அரசர்கள் தன் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று மட்டுமே வைத்திருந்தது.

19-ம் நூற்றாண்டில் பிரெஞ்சு, பிரிட்டிஷ், ஜப்பானிய காலனிய சக்திகள் சீனாவுக்குள் நுழையும்வரை இந்நிலை நீடித்தது.

கொலம்பஸ் போன்றோர் சிறு கப்பல்களில் உலகத்தைச் சுற்றுவதற்கு முன்பாகவே பெரும் சீனக் கப்பல்கள் பல இடங்களுக்குச் சென்றுவந்துள்ளன. ஆனால் சீனா எக்காலத்திலும் ஒரு பெரும் கப்பற்படையைக் கொண்டு உலகை ஆட்சி செய்ய யோசித்ததில்லை. அதேபோல, இனியும் அப்படிச் சிந்திக்காது.

5. வர்த்தகம்

இன்று இந்தியா தவிர்த்த பிற ஆசிய நாடுகள் செய்யும் மொத்த வர்த்தகத்தில் 25% சீனாவுடன். உலகின் பெருவாரியான நாடுகள் - வளர்ந்த, வளரும் நாடுகள் - சீனாவுடன்தான் மிக அதிகமான வர்த்தகத்தைச் செய்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளின் முதன்மை வர்த்தகப் பங்காளி சீனாதான். இது மேலும் மேலும் அதிகரிக்கத்தான் போகிறது. உலகின் முதன்மை நாணயமாற்று கரன்சியாக ரென்மின்பி ஆகப்போகிறது.

6. தென் சீனக் கடல்

தென் சீனக் கடல் பகுதி முழுமையும் தன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று சீனா நினைக்கிறது. அப்பகுதியில் பிறர் யாரும் தலையிடுவதை சீனா விரும்பவில்லை. (பார்க்க: வியட்நாம்-இந்தியா -எதிர்- சீனா பிரச்னை.)

7. இனமும் கலாசாரமும்

சீனாவில் பெருவாரியான மக்கள் (சுமார் 90%) ஹான் சீனர்கள். பிற பெரும் நாடுகளைப் போலன்றி (அமெரிக்கா, இந்தியா) பெரும்பான்மை சீனர்கள் தங்களை ஒரே இனத்தினராகக் கருதுகிறார்கள்.

ஆனால் ஒரு சிக்கல். ஹான் சீனர்கள் தம் கலாசாரத்தை மட்டுமே உயர்ந்ததாகக் கருதுபவர்கள். அத்துடன் பிற கலாசாரங்களைத் தாழ்ந்தவையாகவும் கருதுகிறவர்கள். எனவே பிற இனங்களைக் கேவலமாகப் பார்க்கிறவர்கள். கலாசாரம் பன்மை என்பது சிறந்தது என்று கருதுபவர்கள் இல்லை. ஒற்றைக் கலாசாரத்தையே விரும்புபவர்கள்.

8. அரசு

ஒரு அரசின் ஆட்சி அதிகாரமும் சட்ட அதிகாரமும் வாக்குரிமை கொண்ட மக்களாட்சியிலிருந்தே பெறப்படுகிறது என்பது மேற்கு நாடுகளின் நம்பிக்கை. ஆனால் இது உண்மையல்ல. இத்தாலி போன்ற நாட்டில் வாக்குரிமையுள்ள மக்களாட்சி நடைமுறையில் இருந்தாலும் அந்நாட்டின் பல இடங்களில் வசிக்கும் மக்கள் அரசை சட்டபூர்வமானதாகக் கருதுவதில்லை. [இந்தியாவில்கூடச் சில இடங்களை இப்படிக் கருத இடமுண்டு - பத்ரி.] ஆனால் சீனா இதிலிருந்து மாறுபட்டது. அங்கே வாக்குரிமை கொண்ட பல கட்சிகள் கொண்ட மக்களாட்சி முறை கிடையாது. ஆனாலும் அங்குள்ள மக்கள் தம் அரசை சட்டபூர்வமானதாகவே கருதுகிறார்கள். அத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு தம் அரசின்மீது திருப்தியே நிலவுகிறது. உள்ளூர் அரசுகள்மீது குறைந்த திருப்தியும் மத்திய அரசின்மீது அதிகபட்ச திருப்தியும் கொண்டிருப்பதாக ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

உலகிலேயே செயல்திறன் மிகுதியான அரசு என்றால் அது சீன அரசுதான். இன்று மேற்குலகம் முழுதும் அரசுகள் தோல்வியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், உலகம், சீன அரசின் மாதிரியைப் படிக்கவேண்டிய அவசியம் வந்துள்ளது.

9. சீனாவின் வளர்ச்சி

2009 உலகப் பொருளாதார வீழ்ச்சிக்குமுன், சீனா எத்தனை ஆண்டுகளில் அமெரிக்காவை எட்டிப் பிடிக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லினர். ஆனால் 2008-க்குப்பின், இந்த ஆருடங்களை மாற்றி எழுதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இந்த எட்டிப்பிடிப்பு இன்னும் வேகமாக நிகழும். இந்த 4 வருடங்களில் மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ரியல் ஜிடிபி குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சி 30% அதிகரித்துள்ளது.

எனவே 2008-ம் ஆண்டை சீனாவின் ஆண்டு என்றே சொல்லலாம். சீனா உலகின் பொருளாதார வல்லரசாக இந்தப் பத்தாண்டின் இறுதிக்குள்ளாகவே (2018) ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ப்ரிக் வங்கி (சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா) என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டால், அது உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.

***


இதன்பின் கேள்வி-பதில் நிகழ்வு நடைபெற்றது. பலர் நேரடியாகக் கேள்விகளைக் கேட்காமல் பெரும் பிரசங்கங்களைச் செய்யத் தொடங்கினர்.

மார்ட்டின் ஜாக், சீனாமீது பெரும் காதல் கொண்டவர் என்று நன்கு தெரிகிறது. இந்தியா-சீனா தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு நன்றாகப் பதில் சொன்னார். நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இந்தியாதான் சீனாவைத் தனக்கு இணையான நாடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. சீனர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் கலந்துகொள்ளும் பந்தயத்தில் இந்தியாவைக் காணவே இல்லை.

இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பது எளிது என்றே மார்ட்டின் ஜாக் கருதுகிறார். உணர்ச்சிவசப்படாமல் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், சீனாவுக்கு இந்த எல்லைகளை மாற்றிக்கொள்ளவோ கொஞ்சம் விட்டுக்கொடுக்கவோ பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என்பது மார்ட்டினின் கருத்து. பதிலுக்கு இந்தியா சீனாவுக்கு என்ன கொடுக்கப்போகிறது?

***

மார்ட்டின் ஜாக்கின் புத்தகத்தை வாங்கிவிட்டேன். படித்துவிட்டு எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை: