சேதமடைந்த விமானம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய ஏர் இந்தியா!
டெல்லி: நடுவானில் கடும் அதிர்வுக்குள்ளாகி சேதமடைந்த விமானத்தை தொடர்ந்து இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.இந்த மாதம் 5ம் தேதி டெல்லியிலிருந்து ஷாங்காய் சென்ற ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஏர்-பாக்கெட் எனப்படும் வெற்றிடத்தில் பறந்தபோது கடும் அதிர்வுக்கு உள்ளானது. இதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு பல பயணிகளும் காயமடைந்தனர்.
ஆனால், இந்த விவகாரத்தை வெளியிலேயே சொல்லாமல் விமானிகள் மறைத்துவிட்டனர். இதனால் இந்த விஷயம் குறித்து சில விமான சிப்பந்திகள் மூலம் பத்திரிக்கைகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து விவகாரம் வெளியில் வந்தது.
இதையடுத்து இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்குச் சொன்னது யார் என்ற விசாரணையில் ஏர் இந்தியா இறங்கியுள்ளது. ஆனால், நடுவானில் நடந்த சம்பவத்தை தங்களிடம் கூட தெரிவிக்காமல் மறைத்த விமானிகள் மீது ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ஆனால், அதைவிடக் கொடுமையான ஒரு விஷயமும் நடந்துள்ளது. கடும் அதிர்வுக்குள்ளாகி லேசாக சேதமடைந்த அந்த விமானத்தை ஷாங்காயிலேயே தரையிறக்கியிருக்க (decommission) வேண்டும். பழுது பார்க்காமல் அதை இயக்கியிருக்கவே கூடாது.
ஆனால், அதே விமானம் அடுத்த 4 மணி நேரத்தில் 250 பயணிகளுடன் ஷாங்காயிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்துள்ளது. டெல்லிக்கு வந்த பிறகே விமானத்தை சேவையிலிருந்து விலக்கியுள்ளனர்.
இதன்மூலம் 250 பயணிகளின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளது ஏர் இந்தியா.
இது குறித்து இப்போது தான் விமானப் போக்குவரத்துறை டைரக்டர் ஜெனரல் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறதாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக