எந்த மொழியிலும் இலகுவான வசனங்களைக் கூட எழுதவும் படிக்கவும் தெரியாத நிலையே எழுத்தறிவின்மை என ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இதனை வரையறுக்கிறது.பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைத் தருகின்றது.
இன்று எழுத்தறிவு பல வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றில் கணித்தலும், கணினி பயன்பாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் சுமார் 776 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வயது வந்தவர்களில் 5 பேரில் ஒருவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. இவர்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள்.அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை சென்று கற்கமுடியாத அற்ற நிலையில் உள்ளார்கள்.
உலக மயமாக்கத்தில் விழிப்புடன் செயற்பட்டு வரும் இன்றைய காலகட்டத்தில் எழுத்தறிவின்மை என்பது வெட்கப்படக்கூடிய விளைவு தான் என்றால் கூட அது தவறல்ல.
அதி நவீன தொழில்நுட்பத் திறனும் கணினிப் பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்திருக்கும் இன்றைய சூழலில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்பட்டே ஆக வேண்டும்.
இலங்கையும் எழுத்தறிவு வீதமும்
எழுத்தறிவைப் பொறுத்தவரை தெற்காசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையில் 5 முதல் 14 வயது வரை, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை, கல்விசார் அபிவிருத்தித் திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது.இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகர்ப்புறங்களிலேயே முன்னேற்றங் கண்டுள்ளது எனலாம்.
சுதந்திரம் கிடைத்து 62 வருடங்களுக்குப் பிறகும் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத் தவறியவர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.
இலங்கை குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு 95 வீதமாகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப் பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.இந்த வகையில், ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.
யுனெஸ்கோவின் அபிவிருத்தித் திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை இதன் முக்கிய அம்சம். அத்துடன் முதியோர்களுக்குக் கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிப்பது வரவேற்கத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக