பிரபாகரனுக்கே நாம் பயப்படவில்லை! உனக்கு பயப்படப் போகிறோமா!: சுமந்திரனின் உரைக்கு ஆளும் கட்சியினர் கூச்சல்
நாட்டு மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறியாது உரிமைகள் பறிக்கப்பட்டதும் அதேவேளை ஜனநாயகத்துக்கு ஆணி அறையப்பட்டதுமான 18ஆவது திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் நாட்டைக் காட்டிக் கொடுக்காத பெருமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சார்ந்துள்ளது என்று அக்கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி.யான எம். சுமந்திரன் நேற்று சபையில் தெரிவித்தார். சுய இலாபத்துக்காக கட்சி தாவுகின்ற நிலை இன்றும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த கலாசாரத்தை நியாயப்படுத்தி பிரதமரே உரையாற்றியது கவலைக்குரியது. எவ்வாறிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எவரும் கட்சி தாவுவதற்கு தயாராக இல்லை. மக்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் எம்மில் எவரும் விலைபோக மாட்டார் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை சுமந்திரன் எம்.பி.யின் உரைக்கு இடையூறு செய்யும் வகையில் ஆளும் தரப்பினர் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். சுமந்திரன் எம்.பி.யைப் பார்த்து ஆளும் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் புலி, புலி என்று கூச்சலிட்டதுடன் பிரபாகரனுக்கே நாம் பயப்படவில்லை உனக்குத்தான் பயப்படப் போகிறோமா என்று கேட்டதுடன் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து முன்நோக்கி வந்து கூச்சலிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக