வியாழன், 20 மே, 2010

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் சனல் - 4

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படை வீரர் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட காணொளி தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ வீரர் ஒருவரினதும் போர் முனையில் கடமையிலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரினதும் கருத்தினையும் சனல் 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

"எமது தளபதி எல்லோரையும் கொலை செய்யுமாறு உத்தரவிட்டார்." என்று இராணுவ வீரர் ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் என்றும் -

"விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" - என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் சனல் - 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட இலங்கை இராணுவ வீரர் பதிலளிக்கையில் -

"முதலில் நாங்கள் அவர்களைக் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். பின்னர் கொலை செய்தோம். போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன. அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்துப் பிரிட்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது -

"இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர். அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான காணொளியை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்துக் கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அரச அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார்" என்று பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் பதிலளித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை: