கொழும்பு, மே 16: இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின் போது ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குப் பகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
இந்த வீடுகள் அனைத்துமே மனிதர்கள் வசிக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்துவிட்டன. சில வீடுகள் மேற்கூரை மட்டும் இடிந்துள்ளன. சில வீடுகள் மேற்கூரையும், சுவர்களும் இடிந்து கிடக்கின்றன. இவற்றை சீரமைத்தால்தான் குடியிருக்க இயலும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
வடக்குப் பகுதியில் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்காவிட்டாலும் அப்பகுதியில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்த வேண்டும் என்பதில் இலங்கை அரசு முனைப்பு காட்டி வருகிறது.
வடக்குப் பகுதியில் தாற்காலிக முகாம்களில் தங்கியிருந்த 2.07 லட்சம் தமிழர்கள் இதுவரை அவர்களது சொந்த ஊர்களுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இன்னும் 80,246 பேர் தங்கியுள்ளனர்.
இவர்களையும் அவர்களது சொந்த ஊர்களிலேயே விரைவில் குடியமர்த்த அதிபர் ராஜபட்ச தலைமையிலான புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த 6 மாதத்துக்குள் இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசும் இந்த காலத்துக்குள் அவர்களை மறுகுடியமர்த்தவே திட்டமிட்டுள்ளது.
வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதியில் மட்டுமே இதுவரை தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட்டுள்ளனர்.
வடக்குப் பகுதியில் பெரும்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டன. இந்த பகுதிகள் மக்கள் வசிப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகின்றது.
வடக்கு மாகாணத்தின் கிழக்கு கடலோரப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி அப்பகுதியை பாதுகாப்பானதாக மாற்றவும் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மறுகுடியமர்த்தல் உள்ளிட்ட மறுவாழ்வுப் பணியை துரிதமாக செய்துவருவதாக அந்நாட்டு அரசு கூறிவருகிறது. ஆனால் இலங்கை அரசின் மறுவாழ்வுப் பணியில் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதுதான் பெரும்பாலான ஈழத்தமிழர்களின் குற்றச்சாட்டாகவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக