வியாழன், 19 ஆகஸ்ட், 2010

'பார்த்து ஏதாவது செய்யுங்கள்'H1B,L1விசா கட்டண உயர்வால்,வாய் மூடிக் கிடக்கும் மத்திய அரசு

வாஷிங்டன்: எச் 1 பி மற்றும் எல் 1 விசா கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியதால் இந்திய நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெறும் கவலை தெரிவித்தோடு அமைதியாகிவிட்ட இந்திய அரசு, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

யுஎஸ் 600 பார்டர் செக்யூரிட்டி மசோதாவின்படி, எச்1-பி, எல் 1 விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் 550 மில்லியன் டாலர் நிதி திரட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவில் அதிபர் பாரக் ஒபாமாவும் கையெழுத்திட்டுள்ளதால், சட்ட வடிவம் பெற்றுள்ளது.

இந்த புதிய சட்டத்தால் அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியப்ப பணியாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். வளர்ந்து வரும் இந்திய - அமெரிக்க பொருளாதார உறவுகளை இந்தச் சட்டம் கடுமையாக பாதிக்கும் என்று இந்திய நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

நிறுவனங்களின் கவலையை, இந்திய அரசின் சார்பில் அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கவலையை கண்டுகொள்ளாத அமெரிக்கா, சட்டத்தில் எந்த மாறுதலும் செய்யப்படாது என்றும், தேவைப்பட்டால் இது தொடர்பாக தேவையான விளக்கத்தை இந்திய அரசுக்குத் தரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க உள்நாட்டு செயலர் ஜேனட் நெபோலிடனோ, "இதில் இந்தியா கவலைப்படும் அளவு ஒன்றுமில்லை. அமெரிக்கா தனது நலன் கருதி கொண்டுவந்திருக்கும் இந்த சட்டத் திருத்தத்தால் இந்திய - அமெரிக்க வர்த்தக உறவு பாதிக்காது. வழக்கம் போல வலுவாகவே இருக்கும்" என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் அமெரிக்க அரசின் துணை பேச்சாளர் மார்க் டோனர் கூறுகையில், "விசா கட்டண உயர்வு குறித்த புதிய சட்டம் நிச்சயம் இந்திய நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. அமெரிக்காவில் உள்ள இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியப் பணியாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதும் உண்மையே. ஆனால் ஆனால் இதற்காக இந்தியாவுடனான நீண்ட கால வர்த்தக உறவு முறிந்துவிடும் என்பதை ஏற்பதற்கில்லை. இரு நாட்டு வெளியுறவுத் துறையும் அதில் உறுதியாக உள்ளன," என்கிறார்.

விரைவில் இது தொடர்பாக இந்திய அரசுக்கு விளக்கம் அளிக்கவும் அமெரிக்கா தயாராக உள்ளதாம்.

ஒருவேளை சர்வதேச வர்த்தக அமைப்பிடம் இதுகுறித்து இந்தியா முறையிட்டால் அதனை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி உரிய விதத்தில் எதிர்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா அத்தகைய நடவடிக்கை எதையும் எடுப்பதாகத் தெரியவில்லை. மாறாக, மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா இது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக்கு 'பார்த்து ஏதாவது செய்யுங்கள்' என்ற ரீதியில் ஒரு கடிதம் மட்டுமே அனுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் சீனாவில் தயாராகும் முட்டை மற்றும் பால் பொருள்களுக்கு முழு தடை விதித்திருந்தது அமெரிக்கா. உடனே, சர்வதேச வர்த்தக அமைப்பிடம் புகார் செய்தது சீனா. இது தொடர்பான விசாரணையில் அமெரிக்கத் தரப்பில் தவறு இருப்பதைச் சுட்டிக்காட்டிய சர்வதேச வர்த்தக அமைப்பு, உடனடியாக சீன முட்டை - பால் பொருள்களுக்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. அமெரிக்காவும் வேறு வழியின்றி சீனாவிடமிருந்து முட்டை, இறைச்சி மற்றும் பால்பொருள்களை இப்போது இறக்குமதி செய்கிறது.
  Read:  In English 
இப்போது விசா கட்டண உயர்வால் இந்திய நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் அடைந்துள்ள பெரும் பாதிப்பைச் சுட்டிக் காட்டி இந்தியாவும் சர்வதேச வர்த்தக அமைப்பிடம் நியாயம் கேட்கலாம்.

ஆனால், 'அமெரிக்கா காலால் இட்ட வேலையை தலையால் செய்யத் தயாராக இருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கை மற்றும் அரசியல் காரணமாக அத்தகைய ஒரு நடவடிக்கையை இந்திய அரசிடம் இனி எதிர்ப்பார்க்க முடியாது என்றும், இந்திய நிறுவனங்கள் கூடுதல் சுமையை தாங்கியே தீர வேண்டியிருக்கும்' என்றும் பொருளியல் நிபுணர்கள் கிண்டலடித்துள்ளனர்!

கருத்துகள் இல்லை: