சனி, 21 ஆகஸ்ட், 2010

இப்போது துரோகிப் பட்டியலில் பிரபா கணேசனைச்சேர்த்திருக்கிறார்கள்.

தியாகிகளும் துரோகிகளும்
-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்  
யார் துரோகிகள்? யார் தியாகிகள்? என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியாகத் தமிழர்கள் இப்போது துரோகிப் பட்டியலில் பிரபா கணேசனைச்சேர்த்திருக்கிறார்கள். அதேபோலத் தியாகிப் பட்டியலில் ஜே.வி.பிசேர்க்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தோடு இணைந்ததற்காக பிரபா கணேசன் தூற்றப்படுகிறார். தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பதைப் போல நாடகமாடும் ஜே.வி.பி பாராட்டப்படுகிறது.அதற்கு இப்போது யாழ்ப்பாணத்தில் வரவேற்பும் அளிக்கப்படுகிறது. இந்தப்பாராட்டுக்கான அடிப்படையே அது அரசாங்கத்தை இப்போது எதிர்க்கிறது என்பதுதான். ஆனால், வடக்குக் கிழக்கை சட்டபூர்வமாகப் பிரித்தது ஜே.வி.பியே என்பதைபலரும் மறந்து வருகிறார்கள். இந்தப் பிரிப்புத்தான் நிர்வாக நடைமுறைகளையும்பிரித்து நடைமுறை ரீதியான நிரந்தரப் பிரிவாக்கியிருக்கிறது.  இது எவ்வளவுஆபத்தானது என்று இவர்கள் சிந்திப்பதாகவேயில்லை. முன்னாள் துரோகிகள் பின்னாளில் தியாகிகள். முன்னாள் தியாகிகள் பின்னாளில் துரோகிகள். இப்படியே கழிந்து கொண்டிருக்கிறது தமிழர்களின் அரசியல் வரலாறு என்று சொல்லிச் சிரித்தார் ஒரு நண்பர். இவர் கடந்த முப்பதாண்டுகளாக தமிழர்களின் அரசியற் போராட்டங்களில் ஈடுபட்டவர். அதனால் தமிழர்களின் அரசியற் போக்குப் பற்றிய கொழுத்த அனுபவம் இவருக்குண்டு. ஆனால், துரோகி தியாகிஎன்ற பிரிப்புகளில் நம்பிக்கையற்றவர். தியாகிகளாலும் எதையும் செய்ய முடியவில்லை.
துரோகிகள் என்றுசொல்லப்பட்டவர்களாலும் வரலாற்றை முன்னகர்த்த முடியவில்லை. ஆனால், துரோகிப்பட்டங்களாலும் தியாகிப் பட்டங்களாலும் காலந்தான் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது நண்பரின் நிலைப்பாடு. நண்பர் சொல்லும் இந்த விசயம், முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தமிழ்ச் சூழலின் மனப்பாங்கு ஏறக்குறைய இவ்வாறு இரண்டு பக்கமும் உயர்த்தப்பட்டசுவர்களுக்குள்ளால்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. துரோகி – தியாகி என்றஇரண்டு பெரிய சுவர்களுக்குள்ளேயே தமிழ்மக்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதைக் கடந்து அவர்களால் வெளியுலகத்தைப் பார்க்க முடியாது. இன்னொரு நண்பர் சொன்னதைப் போல தமிழர்களுக்கு எப்போதும் ஒரு கட்டப்பொம்மனும் எட்டப்பனும ்பண்டாரவன்னியனும் காக்கை வன்னியனும் தேவையாக இருக்கிறது. எப்போதும்கதாநாயகனும் வில்லனும் தேவை. அவர்கள் எம்.ஜீ.ஆரையும் நம்பியாரையும் இந்தப்பரிச்சயத்தோடுதான் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கவேண்டியது. ஆனால், இந்தத் துரோகி – தியாகிப் பிரிப்புகளை ஈழத்தின் முக்கியமான அரசியல்ஆய்வாளர் இருவர் முற்றாகவே நிராகரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ‘யாரும்யாருக்காகவும் தியாகங்களைச் செய்யத் தேவையில்லை. அப்படித் தியாகஞ்செய்வது என்பது ஒருவரின் எல்லையற்ற உழைப்பிலும் வாழ்விலும் பிறர் தங்களுடைய வாழ்வைக்கட்டியெழுப்பவே வழிசெய்யும். இதுவும் ஒரு வகையான கொடுமையே.
அதாவது  தியாகத்தின்பேரால் தம்முடைய வாழ்வை இழக்கும் ஒரு தரப்பை மற்றத் தரப்பு சுரண்டுவதாகவே அமையும். இதை ஏற்கக் கூடாது. ஆனால், பொதுவாழ்வுக்கு வருவோர், போராட்டத்திலும் அரசியலிலும் ஈடுபடுவோர்தங்களை கூடுதலான அளவுக்கு அர்ப்பணித்தால் போதும். அந்த அர்;ப்பணிப்பானது சமூகத்துக்கானதாக, எதிர்கால மக்களுக்கானதாக இருந்தால் போதும் என்பதாகும். ஏறக்குறைய இத்தகைய நிலைதான் இன்று உலகத்தின் பொதுப்போக்காக இருக்கிறது. இதுதான் பல விசயங்களைச் செய்யவும் பலவற்றைப் புரிந்து கொள்ளவும் உதவும். இவ்வாறான ஒரு புரிதலும் நடைமுறையும் அமையும்போதுதான், எதிரிகளைக் கையாளக்கூடிய, நண்பர்களை அரவணைக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும். இந்த மாதிரி ஒரு போக்கு வளர்ச்சியடைந்தால்தான் இராசதந்திரம் என்ற அரசியற் பொறிமுறை சாத்தியமாகும்.அதன் சாதனைகள் எட்டப்படும். இதுவே ஒரு வகையில் ஜனநாயகத்தை மலர்விக்கவும ்உதவும். மட்டுமல்ல இத்தகைய சூழலில்தான் பல அரசியற் சக்திகள் செயற்படவும்மக்கள் சுயாதீனமாகத் தமக்கான தேர்வுகளைச் செய்யவும் உதவும். ஆகவே,  தமிழர்கள் முதலில் இந்தத் துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தல்களில் சிறைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதுவொருஅறிவியல் முடிவு. அனுபவத் தெளிவு.
நண்பரும் ஆய்வாளருமான நிலாந்தன் குறிப்பிடுவதன் சாராம்சத்தை இங்கே மீளவும் நினைவூட்டலாம். எதையும் பிரித்துப் போடும் கறுப்பு வெள்ளைப் பெட்டிகள் இனிவேண்டாம். கறுப்பு வெள்ளை அரசியலின் காலம் முடிந்து விட்டது. அது நமக்குப்பெற்றுத் தந்தது கண்ணீரையும் இரத்தத்தையும் முடிவில்லாத அவலங்களையும் தோல்விகளையுமே. ஆகவே, புதிய அரசியற் பண்பாட்டுக்குச் செல்லவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அது கறுப்புமல்லாத வெள்ளையுமல்லாத கிறே பொலிற்றிக்ஸ்.அதைப் பற்றியே நாம் இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது. நமது அத்தனை அனுபவங்களையும் பிடி சாரமாக்கி, நாம் புதிய வீரியத்தைப் பெறவேண்டியிருக்கிறது. இருக்கும் நிலைமைகளின் சரிபிழைகளைப் பற்றியே எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதைவிடவும் இருக்கவேண்டிய புதிய நிலைமைகளைப் பற்றிச் சிந்திப்பதே இப்போதுமுக்கியமானது. ஏனெனில், நாம் எதிர்கொள்ளவுள்ளது எப்போதும் அடுத்துவரும் கணங்களையே. இந்தக் கணம் என்பது எப்போதும் முடிந்து கொண்டிருப்பது. ஆகவே,எதிர்வரும் கணங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை: