புதன், 18 ஆகஸ்ட், 2010

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இணைந்து ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக வழக்கு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்காக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன்கூட்டுச் சேர்ந்து செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியை கோருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மிக்கா சிங்கப்புலியிடம் தெரிவித்தனர்.
குற்ற புலனாய்வு பிரிவினரின் புலனாய்வு சுருக்க அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த விசாரணையை பொலிஸ் மா அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வு பிரிவினரினர் ஆரம்பித்தனர்.
சந்தேக நபர்களான சிவராஜா, சுபா கிருஷ்ணன், நடராஜசிங்கம் சபாஷ் அல்லது ஸ் ரீபன் அல்லது ஜானு, லின்ரன், சந்திரஷான், வரதராஜன் ஆகியோர் தடுத்துவைக்கப்பட்டு குற்றஞ்சாட்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
நடராஜசிங்கம் சுபாஸ் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் மருமகன் எனவும் அவரின் பிரத்தியேக உதவியாளராகவும் பணியாற்றியதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை சந்தித்து அவருடன் சேர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கொலை செய்ய திட்டம் தீட்டினர் என குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது.
சந்தேக நபர்களுக்கு விடுதலைப் புலி உறுப்பினரான மலேஷியவைச் சேர்ந்த ராஜன் என்பவர் நிதி வழங்கினார். இவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு ஒரு மில்லியன் ரூபா அனுப்பியிருந்தார்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கிரகரி வீதியில் ஓர் இடத்தையும், கிருலப்பனையில் ஓர் இடத்தையும் ஜனாதிபதி அடிக்கடி வரும் இடங்களாக, சந்தேக நபர்களுக்கு காட்டியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய தாம் விசாரணைகளை முடித்துக் கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்ததுடன் அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஒரு தினத்தை கோரினார். நீதவான் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விண்ணப்பத்தை அனுமதித்தார்.

கருத்துகள் இல்லை: