சனி, 21 ஆகஸ்ட், 2010

போதை மருந்து விவகாரம்: பிரபல நடிகைகள் சிக்குகிறார்கள்

கோகைன் போதை மருந்து வாங்கும்போது தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு முன்னணி நடிகைகள் சிலரும் போதை மருந்து பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கேளிக்கை, பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள், பஃப்கள் ஏராளமாக உள்ளன. சில முக்கிய பஃப் களுக்கு வரும் வி.ஐ.பி.க்கள், நடிகர், நடிகைகளுக்கு கோகைன் போன்ற போதை மருந்து ரகசியமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக இதுபற்றி ஐதராபாத் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பஃப் மற்றும் ஆடம்பர ஓட்டல்களை போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வந்தனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கிரீன் மாஸ்க் அருகே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவரிடம் வாலிபர்கள் போதை மருந்து வாங்கினர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். கோகைன் போதை மருந்து விற்றவர்கள் நைஜீரியாவை சேர்ந்த சிமா கிளமன்ட் (எ) விக்டர், அவரது நண்பர் நரேஷ் என்பதும், அவர்களிடம் கோகைன் வாங்கியவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுநாத ராஜு என்ற ரகுபாபு (34), பரத் ராஜு (36) என்பது தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறியதாவது,

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்தது. பிரபல ஹீரோயின்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 65 பேர் கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை உபயோகிப்பதாக தெரியவந்தது.

நகரின் பல இடங்களிலும் 9 பெரிய பஃப்களிலும் இது விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. பஃப்களில் போதை மருந்து மட்டுமில்லாமல் மது மற்றும் போதை மாத்திரைகளை பெண் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். உகாண்டா, தான்சானியா போன்ற நாடுகளிலிருந்து வந்தி ருக்கும் சிலரும் போதை மருந்து விற்பதாக தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். போதை மருந்து கும்பல் விரைவில் பிடிபடும் என்றார்.

கருத்துகள் இல்லை: