வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

யாழ் குடா நாட்டின் தரைக்கீழ் நீர் வளம் - பாகம் 01

(பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்)
தரைக்கீழ் நீர் வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வடமாகாணத்தின் மொத்த குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ் குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர் வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத் தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசீன் காலச் சுண்ணாம்புப் பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும்.

சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புக விடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது.

உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர் நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ்வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்கின்றது.

ஆகக்கூடிய தடிப்பு 100110 வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர் நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.

சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்ற மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது.

மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
(தொடரும்.)

கருத்துகள் இல்லை: