அடுத்த ஆண்டு முதல்
சகல பல்கலைகளிலும் ஆங்கிலம் போதனாமொழி
அடுத்தாண்டு முதல் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலுமுள்ள கற்கை நெறிகளில் 99 சதவீதமானவற்றின் போதனா மொழி ஆங்கிலமாக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதேநேரம் இந்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளும் ஒழுங்கு விதிகளும் துரிதமாகத் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குருநாகல் மாவட்ட ஐ. தே. க. எம்.பி தயாசிறி ஜயசேகர எழுப்பிய வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் இற்றை வரையும் இலங்கையில் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த 78 நிறுவனங்கள் முதலீட்டு சபையின் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 26 நிறுவ னங்கள் தான் தற்போது இயங்குகின்றன.
ஏனையவை இற்றை வரையும் செயற்பட வில்லை. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து கற்கை நெறிகளை நடாத்தி பட்டம், டிப்ளோமா, சான்றிதழ்களை வழங்குகின் றன.
இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங் களை ஆரம்பிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு ள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் அவற்றில் கற்கும் மாணவர்களில் 20 சதவீதமானோர் இலவசமாக கல்வி கற்கக் கூடிய வகையில் புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கப்படும். இங்கு தனியார் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை உள்ளூர் பல்கலைக்கழகங்களுக்கு எதுவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அடுத்த வருடம் முதல் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் 99 சதவீதமான கற்கை நெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும். அதனால் ஆங்கில மொழியறிவு போதியளவு தேவைப்படும் அதற்காக பட்டதாரி மாணவர்களுக்கு விசேட வகுப்புக்கள் நடாத்தப்படும். அத்தோடு ஆங்கில மொழியில் விரிவுரைகளை நடாத்த முடியாதுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு இந்தியாவின் உதவியோடு ஆங்கில மொழியறிவு பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கென ஆங்கில மொழி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக