சனி, 21 ஆகஸ்ட், 2010

அதிசய வாழை வாரிவாரி காய்களைக் குவித்திருக்கும் அதிசயத்தைக்

வாழை வாழவும் வைக்கும்.... தாழவும் வைக்கும்...’’ கிராமத்து வாழை விவசாயிகளிடம் இப்படியொரு சொலவடை உண்டு.ஆனால் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அரு கிலுள்ள எழுவரைமுக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாத்துரையை வாழை ஓகோவென உயரத்தில் தூக்கி உட்கார வைத்துவிட்டது.இவரது தோட்டத்து வாழைகள்   வாரிவாரி காய்களைக் குவித்திருக்கும் அதிசயத்தைக் காண படையெடுத்து வருகிறார்கள் அக்கம்பக்க விவசாயிகள்.
நான்கு ஏக்கர் நிலத்தில் கற்பூரவள்ளி, நாடு, கோழிக்கூடு, ரோபஸ்டா என நான்கு வகையாக 4000 வாழைகளைப் பயிரிட்டிருந்தார் அய்யாத்துரை. அதில் கற்பூரவள்ளி மட்டும் இரண்டாயிரம் வாழைகள்.அந்த கற்பூரவள்ளிதான் அய்யாத்துரைக்கு இப்போது பெயரும் பெருமையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக கற்பூரவள்ளி  வாழைத் தாரில் சராசரியாக 9-ல் இருந்து 15 சீப்புகள் வரை இருக்குமாம். ஆனால், அய்யாத்துரையின் தோட்டத்து கற்பூரவள்ளி வாழைகளில் ஏறத்தாழ எல்லாமே  சராசரியாக 20-ல் இருந்து 30சீப்புகள்வரை காய்த்திருக்கிறது. அதிகபட்சமாக ஒருசில வாழைகளில் 35சீப்புகள் வரை உள்ளது. சீப்புக்கு ஏறத்தாழ 19காய்கள் என மொத்தத்தில் ஒவ்வொரு வாழைத்தாரும் 500 காய்களை அள்ளித் தந்திருக்கிறது.
அந்த கற்பூரவள்ளிப் பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி வாழை மரங்கள் 20 அடியிலிருந்து 25 அடி உயரம் வரை வளர்ந்து இருப்பதால், ஒரு  வாழை மரத்துக்கு ரூ.410 என விலை பேசி சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், புன்னையடியில் உள்ள அவரது சொந்தக் கோயிலில் தோரணம் கட்டு வதற்காக  33 வாழை மரங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்.
இது எப்படி சாத்தியமானது? அய்யாத்துரையிடம் கேட்டோம். “எனக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது!’’என்று நமக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்த அவர், ‘வாழையைப் பற்றி ஒன்றும் தெரியாத இவன் முதல் தடவையே 4000வாழைகளைப் போட்டிருக்கிறானே’என்று சிலர் கேலி செய்ததால் நாம் தோற்றுவிடக்கூடாது என் பதில் உறுதியாக இருந்தேன்.
களை இருந்தால் வாழையைத் தின்றுவிடும் என்பதால் வாழையைச் சுற்றி களையெடுப்பதற் காகவே 10பெண்களை நியமித்தேன்.அதேபோல மற்றவர்களைப் போல ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை உரம் வைப்பதற்குப் பதில் 15நாட்களுக்கு ஒருமுறை யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களைக் கலந்து, ஒரு வாழைக்கு 300  கிராமுக்கு குறையாமல் உரம் வைத்தேன்.வஞ்சகம் இல்லாமல் தண்ணீரும் பாய்ச்சினேன். அதுதான் விளைச்சலுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்’’ என்றார் அவர்  உற்சாகமாக.
இதுபற்றி ‘தமிழ்நாடு வேளாண் துறையின் தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குநர் ரஞ்சித் சிங்கிடம் கேட்டோம்.“கற்பூரவள்ளி வாழைத் தார்களில் 20சீப்புகள் வரை இருப்பது அதிசயம்.அதிலும் அய்யாத்துரையின் தோட்டத்தில் எல்லா வாழைகளிலும் 20-க்கும் மேற்பட்ட சீப்புகள் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
இயற்கையாக நிலத்தில் சக்தி வாய்ந்த உரம் மக்கி இருந்து அதில் விவசாயம் செய்தால் இப்படி அபரிமிதமான விளைச்சல் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், அய்யாத்து ரையின் தோட்டத்தில் ஏற்கெனவே இரண்டு முறை வாழை பயிரிடப்பட்டிருந்தும் இந்த முறை இப்படி காய்த்துத் தள்ளியிருப்பது ஆச்சரியம்தான்.
களைகளை வளரவிடாமல் தடுத்து அதிக உரம் வைத்துப் பராமரித்ததால் அய்யாத்துரையின் வாழைகள் சாதா வாழைகளாக இருந்தும் இப்படி சாதனை புரிந்திருக்கின்றன. இந்த மாதிரி அபரிமித விளைச்சலுக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பரீட்சார்த்த முறையிலஅதை மற்ற இடங்களிலும் செய்ய இருக்கிறோம்’’ என்றார் அவர்.
எஸ். அண்ணாதுரை

கருத்துகள் இல்லை: